Wednesday, August 22, 2018

விழும் போதும், எழும் போதும் குழந்தையாவோம்.

பெரும்பான்மையான தருணங்களில் நாம் நமது, சொல் , செயல் அனைத்தையும் பிறரை சார்ந்தே செய்கிறோம். ஒரு சபையில் நமது பங்களிப்பு அனைவராலும் கவனிக்கப்படும்போது இத்தகைய நிலைப்பாடு அவசியம். ஆனால், நாம் தனிமையில் இருக்கும்போதும், நமக்கான முடிவுகளை எடுக்கும்போதும் நம்மை விட , பிறரை பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.


ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன், நமது பங்களிப்பு அதில் சிறிதான போதும், நம் எண்ணம் எல்லாம்... அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரும் நமக்கு பின்னால்  நம்மை பற்றி புறம்  பேசுவார்கள் என்ற ஐயத்துடனே  இருக்கின்றோம்.

சிறிய விஷயமானாலும், நம் உடையை பற்றி என்ன பேசுவார்கள்? நாம் எடுத்த மதிப்பெண்களை பற்றி என்ன comment அடிப்பார்கள்? நமது performance  பற்றி எவ்வாறு தங்களுக்குள் விமர்சித்து கொள்வார்கள் என அந்த நினைவாகவே குழம்பி தவிக்கின்றோம்.

உண்மையில், நம்மை போன்ற சராசரி மனிதர்களின் செய்கைகளை பற்றியோ, சாதனைகளை பற்றியோ, உன்னிப்பாக, அக்கறையாகவோ, அல்லது விமர்சனத்திற்காகவோ தொடர்பவர் யாருமில்லை. 

வாழ்க்கை ஓட்டத்தில், தமது அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்கே  ஒருவருக்கும் நேரம் போதவில்லை. இதில் நம்மை போன்ற சாதாரணமானவர்களின் நிலயை எண்ணி பெருமை படுவதற்கோ,அல்லது பரிகாசம் பண்ணுவதற்கோ யாருக்கும் நேரமில்லை.

நமது செய்கைகள், முயற்சிகள் ,சாதனைகள், சறுக்கல்கள்,தோல்விகள்,அனைத்தும், நம்முள் உருவாகி, நம்முள் வளர்ந்து, நம்முடனேயே கரைந்து விடுகின்றன.

இவற்றை ஏறெடுத்து பார்ப்பதற்கு யாருக்கும் நேரமில்லை, தேவையுமில்லை. 

எவ்வாறு ஒரு சிறு குழந்தையானது, கீழே விழும்போது, யாரும் கவனிக்க வில்லையெனில் , தானே எழுந்து சாதாரணமாக செல்கிறதோ, அது போல் நாமும் நமது வெற்றியின் போதும், தோல்வியின் போதும், இவை யாராலும் கவனிக்கப்பட வில்லை என்ற எண்ணத்துடன் நமது பயணத்தை தொடர்ந்தோமேயானால், 

வெற்றியில் தலைக்கனமும் , தோல்வியில் தன்னிரக்கமும் என்றும் தலை தூக்காது.

 நாமாக  வாழ்வோம், நமக்காக வாழ்வோம்.









Saturday, April 5, 2014

நாம் யார் கனவோ ?


ஒரு முறை நாரத மகரிஷிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவர் பகவானிடம் , " அனைவரும் மாயை , மாயை என கூறுகிறார்களே , அப்ப்டியென்றால்  என்ன ?" என்று கேட்டார் .

உடனே பகவானும், ஒரு குளத்தை காண்பித்து "அதில் ஒரு முறை மூழ்கி எழுந்து வா" என்று கூறினார் .

நாரதரும் உடனே அந்த குளத்தில் மூழ்கினார்.

அதன் பிறகு நடந்தவை.:

நாரதர் பூவுலகில் ஒரு ஆண்  குழந்தையாக பிறந்து , வளர்ந்து, மணம்  செய்து, எண்ணிலடங்கா  குழந்தைகள் பெற்று , துன்புற்று , இறுதியில் வாழ்க்கையை முடித்துக்கொள்ள , ஒரு குளத்தில் குதித்தார்.

மீண்டும் எழுந்த போது, திருமாலின் அருகில் இருப்பதை கண்டார்.

பகவான் சிரிப்புடன் இது வரையில் நீ பூவுலகில் வாழ்ந்ததாக நினைத்துகொண்டிருந்தது தான் "மாயை" எனக் கூறினார்.

இந்த உலக வாழ்க்கையில் சிறிது மட்டுமே மகிழ்ச்சி உள்ளது , பெரும்பாலும் துன்பமே என எந்நாளும் வருந்துவோருக்கு இந்த கதை சிந்தனைக்கு ஒரு கருவாக அமைகிறது அல்லவா ? 

இங்கு நாம் சந்திக்கும் அத்தனை சம்பவங்களும் illusion ஆகும். இவை நிரந்தரமானவையோ, நம்மை துன்பப்பட வைக்க கூடிய நோக்கத்திலோ வருபவை அல்ல. 

அனைத்திலும் பங்கு பெற்று , ஒரு நாடகத்தின் பகுதியே இவை என சிந்தித்து அனைத்தையும் சரி சமமாக பாவித்தல் வேண்டும்.

ஆகவே நாமும் நமது வாழ்கையும் யாருடைய கனவோ ஆகும் .

நாம் யாருடைய கனவாக இருக்கிறோம் என கண்டறிதல் ,
மிக பெரிய மகான்கள் தேட சொன்ன " நான் யார் ?" என்ற வினாவிற்கு  எனக்கு தெரிந்த விளக்கம் ஆகும் .

வணக்கங்களுடன் 
K.T.S.Mugundan


சிறிது விசாலமாக பார்ப்போம்



திருமாலும் நாரதரும் ஒரு முறை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தபோது , நாரதர் பகவானிடம் "திருமாலிடம் மிகுந்த பக்தி கொண்டுள்ளவர் யார்?" எனக் கேட்டார்.திருமாலும் ஒரு குடியானவனை சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடன் நாரதர் அம்மனிதனின் அன்றாட செய்கைகளை கவனித்தார்.

அவன் காலை எழுந்தவுடன் ஒரு முறையும், உணவு உண்ணும்போது ஒரு முறையும் , இரவு தூங்கும் பொழுது ஒரு முறையும் " ஹரி ஹரி " என்று நாரணன் நாமத்தை கூறி வந்தான்.

இதைக்கண்ட நாரதர் புன் சிரிப்புடன் " எப்பொழுதும் தங்கள் நாமத்தை சொல்லும் என்னை விட , மிக மிக குறைந்த முறை சொல்லும் இவன் மிக சிறந்த பக்தனா?" என ஆணவத்துடன் கேட்டார் . உடனே பகவான் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை நாரதரிடம் கொடுத்து மூவுலகையும் ஒரு முறை எண்ணை  சிறிதளவும் சிந்தாமல் சுற்றி வர வேண்டும். அப்படி வந்தால் உண்மையான பக்தன் யார் என தெரியும் என கூறினார்.

நாரதரும் மிகுந்த கவனத்துடன் மூவுலகையும் சுற்றி வந்தார். வந்தவுடன் பகவானிடம் "தாங்கள் சொன்ன படி ஒரு சொட்டும் விழாமல் சுற்றி வந்து  விட்டேன் . இப்பொழுது சொல்லுங்கள் யார் மிக சிறந்த பக்தர்?" என கேட்டார்.

பெருமாளும் சிரிப்புடன் , "மூவுலகை சுற்றி வந்த போது  எத்தனை முறை என் நாமத்தைக் கூறினாய் ? "என கேட்டார். அப்போதுதான் வேலை கவனத்தில் தான் ஒரு முறை கூட சொல்லவில்லை என நாரதருக்கு உரைத்தது .

பகவான் சிரிப்புடன் , "நீ வேலை இல்லாத போது 1000 முறை கூறியதையும் , வேலையின் பொது என்னை மறந்ததையும்,அந்த குடியானவன் தனது வறுமை மற்றும் வேலை  பளுவிலும் என்னை மறவாமல் எனது பெயரை கூறுவதையும் வைத்து பார்க்கும் போது எது சிறந்த பக்தி என நீயே முடிவு செய்து கொள் "எனக்கூறினார்.

நம்மில் பெரும்பாலோர் ஒரு கூட்டு முயற்சியில் , நாம் தான் மிக அதிக பங்களிப்பு கொடுக்கிறோம் என நமக்கு நாமே ஒரு சபாஷ் போட்டுக்கொள்கிறோம்.

நம்மால் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களது பங்களிப்பையும் சிறிது கவனத்தில் கொண்டோமேயானால் , நமது உண்மையான நிலை என்பது தெரிய வரும்.

இது ஒரு சிறு Self Analysis தான் முயற்சித்து பாருங்களேன்.

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan

Saturday, August 31, 2013

எனது உறவுகள்

வார நாட்களில் office works , business  dealings ,  இன்ன பிற தொழில் சம்பந்தமான அலைக்கழிப்புகள் நம்மை நமக்கே அந்நியமாக்குகிறது. நமக்கே நமக்கான விடுமுறையில் , நம் எண்ணங்களின் சுதந்திரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்த தேவை இல்லாத போது , நமது இனிய பொழுதை நாம்  நம் குடும்ப உறுப்பினர்கள் தவிர ,குறிப்பிட்ட ஒரு சிலருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.  அருகில் இருந்தால் சந்திப்பதின் மூலமும் , தொலைவில் இருந்தால் , atleast  , போன் ,e mail  அல்லது sms  மூலமாவது , உருப்படியான செய்தி ஏதும் இல்லை என்றாலும் நம் நேரத்தை விரும்பி செலவு செய்வோம்.

அத்தகைய நெருங்கிய வட்டத்திற்குள் நிற்பவர்களை தீர்மானிப்பது எது?

அனுபவத்தை போல சிறந்த ஆசான் இல்லை என்பது சிறிய வாக்கியமானாலும் , எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது!

நமது வாழ்வில் நாம் பெரும்  அனுபவங்களே நமக்கு உரியவர்களை தேர்வு செய்ய உதவுகிறது.

பிறப்பினால்  , ரத்த சம்பந்தத்தினால், திருமண பந்தத்தினால் நமக்கு போதும் போதும் என்னும் அளவிற்கு உறவுகளும், உறவினர்களும் கிடைப்பார்கள்.

பள்ளியில், கல்லூரியில்,அலுவலகத்தில்,நமது சுற்றுப்புறத்தில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள்.

அத்தனை உறவினரையும், நண்பரையும் நாம் நமது நெருங்கிய வட்டத்தில் வைத்துக் கொள்கிறோமா?

ஒரு சிலர் ! வெறும் ஒரு சிலரையே  நமக்கு துயரத்தில் மருந்தாகவும், தடுமாற்றத்தில் கலங்கரை விளக்காகவும், நமது செயல்களின் விமர்சகர்களாகவும் நமது மனம் அங்கீகரிக்கிறது.

ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளைப் பொறுத்தே அவர்கள் தமது சுற்றத்தை தேர்ந்தெடுக்கும் அளவுகோல் அமைகிறது.

எனது அளவு கோலாக நான் கொள்வது :

1. எனது  துன்பத்தில் எவ்விதமாயினும்  பங்கு கொள்கிறவரை

2. தமது இன்ப நிகழ்வுகளை என்னுடன் மறவாமல் பகிர்ந்து கொள்பவரை .

இவை ஏதும் சட்ட வரையறைக்கு உட்பட்டவை அல்ல. ஆனாலும் நான் எதிர்பார்க்கும் இவற்றை நானும் practice  செய்கிறேன்.

இவற்றினால் எனக்கு பிரியமானவர்களின் பட்டியலை என்னால் தீர்மானிக்க முடிகிறது.

எனது வட்டம் சிறியதாய் இருந்தாலும் அதில் உள்ளவர்கள் என்னை கருத்தில் கொள்பவர்கள் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.

அன்புடன்

K.T.S.Mugundan






Tuesday, March 26, 2013

குறையொன்றுமில்லை


அதிகமான சமயங்களில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?

உலகில் நம்மைத்தவிர அனைவரும் நலமாக இருப்பதாகவும் நாம் மட்டும் அனைத்து துன்பங்களையும் ஒரு சேர அனுபவிப்பது போலவும் பெரும்பான்மையானோர் எண்ணிக்கொள்கிறோம் .

அவை பொதுவாக  கீழ்காணும் சில சந்தர்பங்களின் போது நமக்கு தோன்றும்.

1. நமக்கு நெருக்கமானவர் அகால மரணம் அடையும் போது.
2. நாம் பெரிதும் நேசிக்கும் நண்பர்கள் காரணம் கூறாது விலகி செல்லும் போது
3.நமது சக அலுவலர் நம்மை விட மதிக்கப்படும் போது
4.குடும்ப  விழாக்களில் நாம் புறக்கணிக்கப்படும்போது 
5.நமது திறமை அங்கீகரிக்கபடாத போது
6.நமது உண்மையான அன்பை மற்றவர் exploit செய்யும் போது.

இவை அனைத்தும் நமக்கு கவலை அளிக்கும் சம்பவங்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

 இவற்றின் தாக்கம் நீடிக்காத போதும் ,நம்மில் பெரும்பாலானோர் தன்னிலை இழந்து , தமது அதிருப்தியை சொல்லிலும் , செயலிலும்  நம்மை சுற்றி இருப்பவர் மீது செலுத்த தவறுவதில்லை.

இருந்தபோதும் இவை மட்டுமே நமது துன்பத்திற்கும் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?" என்ற கேள்விக்கும்  காரணமாய் இருந்தால் ,

நமது கவலைகள் அர்த்தமற்றவை.

தலைப்பில் காணும் "குறையொன்றுமில்லை" என்பதே  நமது வாழ்க்கைக்கு  பொருத்தமானதாகும் .

ஏனெனில்

இவைகளே துன்பத்தின் விளிம்பு என்றால் கீழ்காண்பவற்றை என்னவென்று சொல்வது.

1.சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடியினர், டெல்லி மாணவி முதற்கொண்டு நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளின் வாழ்விலும் ஏற்பட்ட  நிலை .

2.தங்களுக்கு சம்பந்தம் இல்லாத போதும் போர் மற்றும் தீவிரவாதத்தால் உடற்குறை அடைந்தோர் மற்றும் பெற்றோரை இழந்த சிறார்களின் நிலை.

3.வசதியற்றோருக்கு ஏற்படும் விலை உயர்ந்த நோய்கள்

இவர்களது நிலைக்கு இவர்கள் காரணமில்லை என்பதும் , இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு "ஈடு செய்ய முடியாதது " (Irreparable Loss ) என்பதும்  கசப்பான உண்மை ஆகும்

ஆனாலும் இத்தகைய நிலைக்கு ஆளாவோர் கூட எதிர்த்து , போராடி, சுய இரக்கதிலிருந்து மீண்டு , வாழ்கையை புதிய கோணத்தில் பார்த்து தாமும் தமது வாழ்கையில் " குறையொன்றுமில்லை" என உரத்து சொல்ல முயற்ச்சிக்கும் போது ,

கிடைப்பதற்கு அரிய , சிந்திக்க தெரிந்த மானிட பிறவியை பெற்றுள்ள நாம், வெறும் அற்ப காரணங்களுக்காக தன்னிரக்கத்தில் சிக்கி , உலகிலேயே  பெரும் துன்பம் நமக்கு உள்ளது என எண்ணுவது slow  poison  உண்பதற்கு ஒப்பாகும்.

அதை விடுத்து நாம் நம் potential உணர்ந்து , தன்னிரக்கத்தில் இருந்து விடுபட்டால், நாம் நமக்கு மட்டுமல்ல , உண்மையாக பாதிக்கப்பட்டோருக்கும் உதவிகரமாக இருப்போம்.  .

" குறையொன்றுமில்லை " என்பதுதான் குறை என மகிழ்வுடன் சொல்வோம்.  

அன்பன்
K.T.S.Mugundan
9884087424





Saturday, February 16, 2013

பூனை கட்டப்பட்டிருக்கிறது




ஒரு ஜென் கதை:

ஒரு ஜென் துறவி நாள்தோறும் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார் . அப்பொழுது ஒரு பூனை குறுக்கும் , நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருந்தது. இதனால் அவரது  சீடர்களின் கவனம் சிதறியது. உடனே துறவி அந்த பூனையை உபதேசம் முடியும் வரை ஒரு தூணில் கயிறினால் கட்டி வைக்க சொன்னார்.
அது முதல் துறவி உபதேசம் தொடங்கும் முன் சீடர்கள் அந்த பூனையை கட்டி வைக்க தொடங்கினர். உபதேசமும் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடந்தது.

நாளடைவில் துறவி முக்தி அடைந்தார். அவருக்குப்பின் வேறு ஒரு துறவி உபதேசம் செய்து வந்தார். சிறிது நாளில் அந்த பூனை இறந்தது.

உடன் துறவி தன சீடர்களிடம் , நாளை உபதேசம் தொடங்கும்முன் ஒரு பூனையை தேடி கண்டுபிடித்து கட்டி வைக்கவும். ஏனெனில் உபதேசம் செய்யும் பொழுது ஒரு பூனையை தூணில் கையிற்றால் கட்டி வைப்பது நமது மடத்தின் கோட்பாடு என்றார்.

நாமும் சில பழக்க வழக்கங்களை , காரண காரியம் ஆராயாமல் வழி வழியாக வந்தவை என பின் பற்றி வருகிறோம்.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டபோது, நீதித்துறை முழுக்க முழுக்க அவர்களிடத்தில் இருந்தது. அவர்களது முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவின் போதும், மிகுந்த வெப்பம் காரணமாக ஏப்ரல் - மே மாதங்களின் போதும் , அவர்கள் நீதி துறை சார்ந்த அலுவல்களுக்கு விடுமுறை அளித்து தமது நாட்டிற்கு சென்று  வந்தனர்

தற்போது நமது நாட்டில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அனைவரும் அறிந்ததே. இருந்தும் மேற்கூறிய விடுமுறை என்னும் பூனையை நமது சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.

இதனால் நாட்டையே உலுக்கும் வழக்குகள் , விரைவாக முடிக்கப்படாமல் ,இழுத்தடிக்கப்படுகின்றன.   தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். அத்துடன், தண்டனை என்பது நிச்சயமில்லை எனும் போது , தவறுகளின் எண்ணிக்கையும் கூடும்.

நாட்டின் நலன் கருதி, தற்போதுள்ள அரசியல் கட்சிகளோ,ஊடகங்களோ,தன்னார்வ அமைப்புகளோ, இந்த பூனையை  கழற்றி விட முயற்சிக்குமா?

அன்பன்
K.T.S.Mugundan
9884087424




Thursday, July 7, 2011

" ஸ்ரீ சக்ரா" - சில வரிகள்.



சுமார் 52 வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிரார்த்தனை கிளப். வெற்றிகரமாக தனது முதல் வயதை பூர்த்தி செய்து  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது .

நோக்கம்  : நமக்கு தெரிந்தோர், புதியவர் யாராய் இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகாக ஒரு குழுவாக முகம் அறியாதவரானாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது.

செயலாக்கம்  : ஒவ்வொரு ஞாயிறும் காலை 7 . 30 மணி வரை உறுப்பினர்கள் தாம் முன்வைக்க விரும்பும் பிரார்த்தனை கோரிக்கைகளை ,பெயர் மற்றும் கோரிக்கை ஆகியவற்றை type செய்து (eg: viji - marriage, raju - education, raghu - health recovery) எனது mobile எண்ணிற்கு SMS செய்வார்கள். அது தவிர பொது  நலத்திற்காக ( eg: பருவ மழை வேண்டி, இயற்கை சீற்றம் தணிக்க வேண்டி etc)ஒரு வேண்டுதலும் இருக்கும்.அவை அனைத்தும்  காலை 7.40 மணிக்குள் consolidate செய்யப்பட்டு உறுப்பினர் அனைவருக்கும் SMS செய்யப்படும். இதன் மூலம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்து வந்த கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் . காலை 7 . 50 முதல் 8 .00 மணி வரை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது இருப்பிடத்திலேயே, தமக்கு விருப்பமான வழிபாட்டு முறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து SMS ல் வந்துள்ள கோரிக்கைகளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.

இணைவதற்கான தகுதி: உறுப்பினர்கள் எக்காலத்திலும் தமது  குடும்பத்தினருக்காக prayer request செய்ய கூடாது.

தற்போதய உறுப்பினர் எண்ணிக்கை : 15 குடும்பங்கள்

நாளைய பேராசை : உலகம் முழுதும் இதில் உறுப்பினராகி ,தனிப்பட்ட குடும்பம் எதுவும்  இல்லை , பொது நலன் ஒன்றிற்காக மட்டுமே பிரார்த்தனை  என்று  "வாசுதேவ குடும்பகம் " என்ற அனைவரும் ஓர் குடும்பம் என்னும் நிலை வர வேண்டும்.

"Helping hands are better than praying lips" என தெரிந்த போதும் "Something is better than nothing" என்ற முதுமொழியும் நினைவுக்கு வருவதால் சிறிது முனைப்போடு செயல் படுத்தி வருகிறோம். 

என்றும் அன்புடன்
K.T.S.Mugundan
9884087424

Saturday, April 9, 2011

அவ்வளவு பெரிய தலைவரா இந்த அன்னா ஹசாரே ?

திரு. அன்னா ஹசாரே அவர்களால் அவதியுறும் அரசியல்வாதிகளுக்காக இந்த லிங்கினை காணிக்கையாக்குகிறேன்
http://vainadheyan.blogspot.com/2011/04/blog-post.html

Monday, April 4, 2011

அடுத்தவர் சொத்தை அபகரிக்கிரீர்களா ?


இந்த தலைப்பை பார்த்தவுடன் பிறரின் பணம், பொருள், மனை முதலிய செல்வங்கள் நம்  கண் முன்  தோன்றும். ஆனால் நான் குறிப்பிடும் சொத்து சிறிது வித்யாசமானது. 

பெரும்பாலானவர்களின்  தவறான எண்ணம் எதுவென்றால் , நாம் ஒருவருடன் செலவழிக்கும் நேரம் அதிகமாக, அதிகமாக , நமக்கு அவர் மீது இருக்கும் அன்பு வெளிப்படும் என்பதாகும்.

இவை சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடும். 


குடும்பத்தாருடன் மாலை நேரங்களிலும், விடுமுறைகளிலும், 

அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட பணி முடிப்பதற்கான சமயங்களிலும் , 

நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் இருக்கும்போதும், 

நாம் செலவழிக்கும் நேரம் அதிகமாக , அதிகமாக 
குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடத்தில் ஒட்டுதலும், 
அலுவகலத்தில் பணியின் மீது ஈடுபாடும் ஏற்படும்.


கீழ்காணும் கேள்விகளுக்கு "ஆமாம்" அல்லது "இல்லை" இவற்றில் தாங்கள் எந்த அணி என பாருங்கள் ?

1  சிறிது அறிமுகமான நண்பரை ஒரு வேலையின் காரணமாக பார்க்க செல்லும் பொழுது , போன வேலை முடிந்தவுடன் திரும்பி விடுவீர்களா?

2 நண்பன் வேலை செய்யும் வெளியூருக்கு சென்று அவனை அலுவலகத்தில் சந்திக்கும் போது நலம் விசாரித்துவிட்டு உடன் திரும்பி விடுவீர்களா?


3  ஏதாவது சுப நிகழ்ச்சிக்கு சென்றவுடன் அவ்வீட்டாரை கண்டு தங்களின் வருகையை பதிவு செய்து நலன் விசாரிப்புகளுக்கு பின்  அவரிடம் மேலும் பேசாமல் மற்ற நண்பர்களுடன் பேசுவீர்களா?

4 முன்னேற்பாட்டின்படி  ஒரு நண்பருடன் சேர்ந்து வெளியே செல்வதற்கு,அவர் வரும்முன் தயாராவீர்களா?


மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு "இல்லை" என உங்களுக்கு தோன்றினால் மேலும் தொடரவும்.  

ஒவ்வொரு " இல்லை " என்ற பதிலும் தலைப்பில் கண்ட  கேள்விக்கு "ஆமாம் " என்ற பதிலை தரும். 

ஆம். நீங்கள் அடுத்தவர்களின் விலை மதிக்க முடியாத நேரம் என்னும் மிகப்பெரிய சொத்தை தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அபகரிக்கிறீர்கள்

 மேலும் மேலே குறிப்பிட சூழ்நிலைகளில் , நமக்கு தெரிந்தவரானாலும் , நெருங்கியவரானாலும்,   அவர்களை  நிறுத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள் .

இவை அனைத்தும் சிறிய திருட்டென்று வைத்துக்கொண்டால், கீழ் காணும் வகையை என்னவென்று சொல்வது?

நம்மில் பலர், தமக்கு  பொது மேடைகளில் வாய்ப்பு என்றும் கிடைக்காது என்ற விரக்தியில், செல்லும் இடமெல்லாம், நண்பர் வீடானாலும் சரி, உறவினர் வீடானாலும் சரி, நண்பர்க்கு நண்பர் வீடானாலும் சரி , அந்த இடத்தை பொதுக்கூட்டமாக பாவித்து தமக்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் அடுத்தவருக்கு புரிய வைக்க முயற்சிப்பார்கள். 

 இத்தகைய வகையினரை, ஒட்டுமொத்தமாக அனைவரின் நேரத்தையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர் எனக் கொள்ளலாம். 


நமக்கே தெரியாமல், நாம் செய்யும் இந்த களவினை கண்டறிந்து , முதலில் நம்மை திருத்திகொண்டால், 

அடுத்தவர் சொத்தை அபகரிக்காதவர்  ஆவோம். 

என்றும் அன்புடன்
கே.டி.எஸ். முகுந்தன் 
9884087424











Tuesday, March 15, 2011

பயனற்றவைகளின் பயன்

நகரத்தில் பிறந்து , படித்து, வளர்ந்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு இளைஞன் சொந்த வேலை காரணமாக முதல் முறையாக ஒரு அக்மார்க் தமிழ் கிராமத்திற்கு சென்றான்.  

சினிமாவிலும், கதைகளிலும் மட்டுமே கிராமத்தை பற்றி கண்டும், கேட்டும் இருந்தான்.  கிராமத்தை பற்றிய பொதுவான ஒரு எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது.

அவன்  பார்த்தவை எவையும் அவனுக்கு புதிதாக இல்லை. நகரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சமையல், துணி துவைத்தல், நீர் இறைத்தல் முதலியவை மிகவும் கடினமாக செய்ய வேண்டி இருப்பதை கண்டு நகரத்தின் பால் பெருமிதம் கொண்டான். 

 கிராமத்து மக்கள் எதையும் ஆழ்ந்தோ,தொலைநோக்குடனோ செய்வதில்லை என்ற எண்ணம் அவனுள் மேலோங்கி இருந்தது. மேலும் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களால் நன்மை ஆன போதும் அவர்கள் காரணம் அறியாமல் முன்னோர் வாக்கின்படி அவற்றை செய்வது அவனை ஏளனமாக சிரிக்க வைத்தது.

நகரின் வாசனை இல்லாமல் அவர்கள் வாழ்வதை பார்த்து அவன் பரிதாபப்பட்டான். 

ஒரு நாள் வாக்கிங் செல்வதற்காக ஊர் எல்லை வரை சென்றான். மிகவும் நடந்ததால் களைப்படைந்து உட்கார ஏதாவது இடம் இருக்குமா என பார்த்தான் .

அருகில் ஒரு மரமும் , அதை ஒட்டி இரு கற்கள் நடப்பட்டு அவை இரண்டிற்கும் மேல் சம தளமாய் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.  அதில் சென்று அமரலாம் என அருகில் சென்று பார்த்தான்.  மேலே உள்ள கல் அவன் மார்பின் உயரத்திற்கு இருந்தது.

வழக்கம் போல் கிராமத்தவர்கள் முன் யோசனை இல்லாதவர்கள் , ஒரு கல் இருக்கையை கூட ஒழுங்கான உயரம் பார்த்து வைக்க தெரியாதவர்கள் என கேலியாக எண்ணிகொண்டான்.

அப்பொழுது ஒரு பெண் தலை நிறைந்த சுமையுடன் அவ்வழியே வந்தாள் அந்த கல்லினை நெருங்கியவள் , தலை சுமையை மிக எளிதாக அந்த கல்லின் மீது வைத்தாள்.

அந்தப்பெண்மணியின் அந்த செய்கை அந்த இளைஞனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.  தான் பயனற்றது என நினைத்தது உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகம் பயன் உள்ளது என்ற உண்மையும், மெத்த படித்த தன்னால் உணரமுடியவில்லையே என வெட்கப்பட்டான்.

நமது மூதாதையர்கள் ஆழ்ந்த அறிவுடனும் , தன்னலமில்லாமலும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செய்திருக்கின்றனர் என்பது அவனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது. 

அக்கல்லினை சுமைதாங்கி என அழைப்பார்கள். இறந்தவர்களின் நினைவாக அவர்களின் உறவினர்கள் வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டி அமைப்பார்கள்.

நாமும் நமது வாழ்கையில் , நமது அறிவினை மட்டுமே மேலானது , மறுக்க இயலாதது என்ற எண்ணத்துடன் அடுத்தவர் வாழ்க்கையில் ஆலோசனை வழங்குகிறோம்.  


தலை சுமை இல்லாதவர்க்கு  சுமைதாங்கியின் உபயோகம் அறியமாட்டார்கள் . சுமை உள்ளவர்கள் மட்டுமே அதன் சுகம் அறிவர். 

நாமும் நமது வாழ்கையில் நமக்கு தெரியாதவற்றை பயனற்றது என ஒதுக்குகின்றோம். நமக்கு பரிச்சயமில்லை என்பதால் மட்டும் எதுவும் உபயோகமற்றதாகாது.

ஆகையால் நாமும் பிறரின் சொந்த விஷயங்களில் ஆலோசனை என்ற பெயரில் குறிக்கிடும் போது  நமக்கு  ஏற்புடையதை ஒட்டி ஆலோசனை வழங்காமல் , ஒரு வழிமுறை நமக்கு புதிதானதாக இருந்தாலும் பயனுள்ளதா என ஆராய்ந்து அவ்வழிமுறை அவர்களுக்கு பயன் தரும் எனில் பழகுதல் நலம்.

பிறருக்கு உதவ நினைப்பதே மனிதத்தன்மையின் அடிப்படை. அந்த உதவியையும் அவர்களின் சுமை அறிந்து அதற்கான சுமைதாங்கி எது என்பதை நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கு உணர்தினோமேயானால் , உறவும் வலுப்படும் நம் எண்ணமும் முழுப்பெரும்.


அன்புடன்
கே.டி. எஸ். முகுந்தன்
9884087424