Thursday, January 28, 2010

விழலுக்கு இறைத்தாலும் வீணாவதில்லை நீர்

விழல் எனப்படும் பயனில்லாத ஒன்றிற்காக பாய்ச்சப்படும் நீர் வீணானது என்பது பழமொழி. இதன் உட்கருத்து புரிந்து கொள்ளாதவருக்கு செய்யும் உதவிகள் (அறிவுரை, பொருள் உதவி முதலியவை) வீணானவையே என்பதாகும்.

இந்த கால கட்டத்திற்கு இப்பழமொழி பொருந்துமா? என சிறிது யோசிப்போம்.

வருங்கால தண்ணீர் தேவையை பற்றி யோசிப்பதால் அரசும் , பொது நல இயக்கங்களும் மழை நீர் சேகரிப்பை பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி சட்டத்தின் மூலம் செயல்படுத்த முனைகிறது.

மழை நீர் சேகரிப்பிற்கு தண்ணீர் எங்கு விழுந்தாலும் அது இறுதியில் மண்ணில் வடிவதற்கு ஏற்பாடு செய்தால் போதும். நிலத்தடி நீர் பலம் பெற்று எதிர் பார்த்த பயனை தரும்.

ஆகையால் நீரை விழலுக்கு இறைத்தாலும் அதன் அடியில் மண் இருப்பதால் அது அன்று இல்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் பயன் தரும்.



நமது உதவிகளை நீரிற்கும், புரிந்து கொள்ளாதோரை விழலுக்கும், நமக்கு அவர்கள் பால் உள்ள அக்கறையை விழல் விளைந்த மண்ணிற்கும் ஒப்பிடுவோம்.


நாம் சொன்ன நல்லவை அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டதே என வருந்த வேண்டாம்

அத்தகைய அறிவுரைகளை கூறுவதன் மூலம் நமது மனமானது பிறர் மீது காட்டும் அக்கறை வெளிப்படுகிறது. மேலும் விசாலமாகிறது. எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ நமது அறிவுரையின் மூலம் நமது கரிசனமும் , அலட்சியப்படுத்த பட்டாலும் நமது பரிவும் வெளிப்படுகிறது.
இது நமக்கு உள்நிறை எழுச்சியை ( மாரல் பூஸ்டிங் ) நாம் அறியாமலே நமக்கு அளிக்கிறது.

விழலுக்கு இல்லாவிட்டாலும் அதன் உள் அமைந்த மணல் பெறுகின்ற பயன் போல, நமது அன்பின் , அருமையை பிறர் அறியாத போதும் , அறிந்து கொள்ள முற்படாத போதும், அவை வீணாகாமல் முடிவாக அந்த அறிவுரையின் மூல காரணமான அக்கறையை வெளிப்படுத்திய நமது மனதிற்கு உரமாகி ,மன நிறைவை நம்மை அறியாமலே நமக்கு தரும் என்பதால்

நமது பரிவிற்கு அணைபோடாமல் அதை அடைவோரை வகைப்படுத்துவோம்.

எனவே மீண்டும் உறுதியுடன் கூறுகிறேன்

விழலுக்கு இறைத்தாலும் வீணாவதில்லை நீர்

இறைத்துக்கொண்டே இருப்போம் இயன்ற வரை

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்









Tuesday, January 26, 2010

ஒரு கேள்வி இரு பதில்

இந்த உலகத்தில் அனைவரும் ( நான் உட்பட)பிறருக்கு தருவதற்கு தயங்காத ஒரு பொருள் அறிவுரை ஆகும். நமது தரம் , எதிர் இருப்பவரின் தரம், சூழ்நிலை இவை எவற்றைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் நாம் வள்ளலாக நம்மை உருவகப்படுத்தி வாரி வழங்குவது அறிவுரைகளைத்தான்.

இதைப்பற்றி யோசிக்கும்போது ஒரு கேள்வி பிறக்கிறது. அது இரு விதமான , முற்றிலும் மாறுபட்ட பதில்களை தனக்காகக்கொண்டு நியாயப்படுத்துகிறது.

அக்கேள்வி

பிறருக்கு அறிவுரை வழங்க நமக்கு தகுதி இருக்கிறதா?

முதல் பதில் : இருக்கிறது

நமது அனுபவங்கள் , நாம் கற்ற பாடங்கள் மூலம் பிறர் பயன்பெற , நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பிறர் வாழ்வில் ஏற்படாமல் இருக்க, அறிவுரை சொல்ல நமக்கு தகுதி இருக்கிறது.

அவை கீழ்காணும் சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கிறது.

.நமது வாழ்க்கை பயணத்தில் நம்மீது பலவந்தமாக திணிக்கப்படும் சூழ்நிலைகளால் நாம் பாடம் கற்றுக்கொள்ளும்போது.

உதா: நமது கருத்தை அறியாமல் நமது எதிர்காலக்கல்வி , திருமணம் முதலியவை நமது மூத்தோரால் ஒருதலை பட்சமாக முடிவெடுக்கப்பட்டு அவை நமக்கு மன நிறைவு இல்லாத ஒரு நிலை உருவாக்கி நமது வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும்போது .

.நமக்கு நெருக்கமானோரின் மீதுள்ள அதீத நம்பிக்கையினால் ஆராயாமல் ஒரு செயலில் தலைப்பட்டு , நமக்கு தெரிந்தே செய்யும் தவறுகளால் மனக்கசப்பு ஏற்பட்டு பாடம் கற்கும் பொழுது.

உதா : நமது நண்பர்கள் மூலம் வருவதால் மனைகள் , சொத்துக்கள் மற்றும் பங்குச்சந்தை முதலியவற்றில் ஆராயாமல் முதலீடு செய்து பின்பு வில்லங்கங்களினால் அவதியுறும்போது .

. நமக்கு தெரிந்தவர்களின் வாழ்வில் கிடைத்த படிப்பினைகளை, அவை நமக்கு ஏற்படாத போதும் பிறருக்கு சொல்லும் போது

உதா : கவனக்குறைவினால் ஏற்படும் திருட்டு, பொருள் இழப்பு , கொள்ளை மற்றும் சுகாதாரத்தில் காட்டும் மெத்தனத்தினால் ஏற்படும் நோய்களை பற்றி கேள்வியுரும்போதும்.

மேற்கண்ட சமயங்களில், நாம் தெரிந்தே செய்த தவறுகளாலும், நம்மீது திணிக்கப்படுபைவகளாலும் நாம் பாடம் கற்று அந்த தவறுகள் மீண்டும் நம் வாழ்வில் நடை பெற அனுமதிக்க கூடாது என்பதில் உறுதி கொள்கிறோம்.

அத்தகைய தருணங்களில் அவற்றை பிறருக்கு கூறி அவர்களின் வாழ்விலும் வருமுன் காத்தலின் பொருட்டு நமக்கு அவர்களின் பால் உள்ள அக்கறையின் காரணமாக நாம் அறிவுரை கூறுவதால் ,நாம் அவற்றை கூறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறோம்.

இரண்டாவது பதில் : இல்லை

௧. நமக்கு கேடு விளைவிப்பவை என நம்மால் உணரப்பட்டும், நம்மால் கைவிட முடியாத பழக்கங்களின் வசம் நாம் இருக்கும் போது.

உதா: கட்டுப்பாடில்லாத உணவு, உறக்கம், சோம்பல், மெத்தனம், ஆழ்ந்து ஆராயாமை, போதை பழக்கங்கள், புறம் பேசுதல் முதலியவை.

இத்தகைய நிலைகளில் சிலர், தத்துவ அறிஞர்களாக மாறி " நான் தான் கெட்டு போயிட்டேன் , நீயாவது இதுல மாட்டிக்காம இரு " என பிறருக்கு அறிவுரை கூறுவர். தாம் ஏதோ மீளாத நிலைக்கு சென்று விட்ட மாதிரியும், இனி திருந்துவதால் ஒரு பயனும் இல்லை, ஆகவே அடுத்தவர்க்கு அறிவுறுத்திக்கொண்டே தமது செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்துக்கொள்வர்.


இத்தகையோர், பிறர் மீது செலுத்தும் போலியான அக்கறையை விடுத்து , தன் மீதும் , தன்னை சார்ந்திருக்கும் தனது குடும்பத்தின் மீதும் உண்மையான அக்கறையை செலுத்துவோரானால், பழக்கங்கள்
எத்தகைய நிலையில் இருந்தாலும் அவற்றை கைவிடுதல் சாத்தியம்.

தனக்கு நல்லது செய்து கொள்ள வாய்ப்பு இருந்தும் முயலாதவர்கள் , அடுத்தவருக்கு அதே பொருளில் எப்படி நல்லது செய்ய இயலும் ?

அவர்கள் மேற்கண்ட பொருளை சார்ந்து அறிவுரை கூறும் தகுதியை இழந்தவர்கள் ஆகின்றனர்.

ஆகவே,

கீதையின் கண்ணனாக நாம் மாறும் முன், நாம் பிறருக்கு கூற இருக்கும் பொருளில் எத்தகைய நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து, முதல் நிலையில் இருந்தால் மட்டுமே தொடர்வது மிகவும் நன்று.

என்றும் உங்களுடன் அன்பன் முகுந்தன்




Sunday, January 17, 2010

நம் காதில் ஒலிப்பது நாராயண மந்திரமே

ஒரு சமயம் நாரத மகரிஷி ஸ்ரீமன் நாராயணனிடம் தாம் எப்போதும் உச்சரிக்கும் நாராயண மந்திரத்தின் மகிமை என்னவென்று வினவினார். அதற்கு எம்பெருமான் அப்பொழுதுதான் பிறந்த ஒரு புழுவின் காதில் அம்மந்திரத்தை உரைக்குமாறு கூறினார். நாரதரும் அவ்வாறே செய்ய புழு உடனே இறந்து விட்டது.

மகரிஷி இதைக்கண்டு திடுக்கிட்டார். பகவான் அவரிடம் "போனால் போகிறது இப்பொழுது பிறந்த மீன்குஞ்சு ஒன்று உள்ளது , அதன் காதில் உரைத்திடுக" என்று சொன்னார். சிறிது தயக்கத்துடன் நாரதரும் அவ்வாறே செய்தார். உடன் அதுவும் மரித்துவிட்டது.


நாரதர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். உடன் பகவான்" கவலை வேண்டாம் , தற்பொழுதுதான் பிறந்த கன்று ஒன்று இருக்கிறது பார், ஒருமுறை அதன் காதில் உரைத்திடுக" என்றார். மிகுந்த தயக்கத்துடன் இருந்த நாரதரை பகவான் மீண்டும் உரைக்குமாறு பணித்திட, அவரும் தயக்கத்துடன் உரைத்தார். அவர் எண்ணியவாறே அதுவும் இறந்து விழுந்தது. மிகுந்த அதிர்ச்சி அடைந்த நாரதர் "பகவானே , மந்திரத்தின் பொருள் கேட்டால் தாங்கள் , பிற உயிர்களின் மாரகதிர்க்கு என்னை காரணமாக்குகிரீர், என்ன விளையாட்டு இது" என கேட்டார் .
அதற்கு பகவான் "சற்று பொறும் மகரிஷி, இன்னும் ஒரு முறை இந்த மந்திரத்தை பரிட்சித்து பாரும் , இந்நாட்டின் அரசனுக்கு, வாரிசு தற்பொழுதான் பிறந்துள்ளது. தாங்கள் அச்சிசுவின் காதில் எமது நாமத்தை உரைத்திடுக "என்றார். துடுக்குற்ற நாரதர், "பகவானே அரசனின் சிசுவை கொன்றால் , அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் , ஆதலால் , மன்னித்து விடுங்கள், என்னால் செல்ல இயலாது "என்றார். அதற்கு பகவான், "கவலை வேண்டாம் , சென்று உரைத்திடுக" என்றார்.

நடுக்கத்துடன் நாரதரும் அக்குழந்தையின் காதில் நாராயண மந்திரத்தை உரைத்தார். மிகுந்த பயத்துடன் கண்களை இருக்க மூடிக்கொண்டு என்ன நடக்குமோ என்று அஞ்சினார். அப்பொழுது ஒரு சிறுகுரல், " மகரிஷி நான் தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுளேன்" என்று கேட்டது. வியப்புடன் கண்களை திறந்தவர், பிறந்த குழந்தை பேசுவதை கண்டார். மற்றவரும் மிகுந்த வியப்புடன் அதை நோக்கினர். அக்குழந்தை " நான் மூன்று பிறப்பு எடுத்து நான்காவதாக இந்த மனிதப்பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. எத்துணை காலம் ஆகுமோ எனக்கவலை கொண்டிருந்தேன். ஆனால், தங்களின் கருணையால், தாங்கள் உரைத்த நாராயண மந்திரத்தின் மகிமையால், புழுவாகி, மீனாகி, கன்றாகி பிறப்பெடுத்து , அம்மந்திரத்தின் மகிமையால் மேலான இம்மானிட பிறப்பெடுத்து, முற்பிறவி நினைவுகளுடன் , பிறந்தவுடன் பேசும் வரம் பெற்றேன். தங்களுக்கு மிகுந்த நன்றிகள். அனைத்தும் தாங்கள் உரைத்த மந்திரத்தின் மகிமையே " என்றது.


மனம் தெளிவுற்ற நாரதர் உடன் பகவானிடம் சென்று " தங்களின் மந்திரத்தின் மேன்மையை அறிந்து கொண்டேன் , எவ்வுயிரையும் மேன்மையான நிலைக்கு உயர்த்த வல்லது அது " என்றார்.

முக்காலமும் உணர்ந்த, பரம்பொருளின் உடன் நிறை, நாரத மகரிஷியால் அம்மந்திரத்தின் பொருள் அறியாமல் இருந்திருக்க முடியாது.

ஆகையால் இக்கதை நமது வாழ்வியலுக்கு தேவையான ஒரு பாடத்தை நமக்கு எடுத்துரைக்கும் பொருட்டே கூறப்பட்டிருக்கறது என்பதை உணர வேண்டும்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு சமயத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் , நாம் அவை உருவாக காரணமில்லாத போதும் , நம்மை , நமது வாழ்க்கையை பாதிக்கிறது.
அப்பாதிப்பினால் அச்சம் கொள்ளாமால், அவற்றை முதலில் , ஏற்றுக்கொண்டு பிறகு ஆராய்ந்தால் , அவை நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த ஏற்படுத்தப்பட்ட படிக்கட்டுகள் என்பதை உணரலாம். அப்படிப்பினையை உணர்ந்து வாழ்வில் செயல்படுத்தினால் நமது வாழ்வும் மேன்மையுறும்.

ஆகவே , துன்பங்கள், சோதனைகள் நம்மை சூழும் பொது, அவை நம்மை அடுத்த உயரிய நிலைக்கு அழைத்து செல்ல நம் காதில் உரைக்கப்படும் நாராயண மந்திரமே என உணர்ந்து செயல்படுவோம்.

சோதனைகள் வெல்லப்படுவதற்கே .

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்

Thursday, January 14, 2010

தேடுங்கள் தாழ்ப்பாளை

நமது உடைமைகள் அனைத்திற்கும் நம்மால் இயன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைக்கிறோம். சிறிய பூட்டு முதல் பெரிய பெட்டகங்கள்வரைஉள்ளே இருப்பவற்றின் மதிப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறோம். யாராலும் எளிதில் உடைக்க முடியாத கதவுகளையும் சில சந்தர்ப்பங்களில் பயன் படுத்துகிறோம் . ஆயினும் உரிமை உடையோர் கையாளுவதற்கு ஒரு தாழினை பொருத்தி அதற்க்கு ஒரு பூட்டினை பொருத்தி வைக்கிறோம். சம்பந்தப்படாதவருக்கு அந்த கதவு ஒரு சவாலாகவே இருக்கிறது. சம்பந்தப்பட்டவருக்கோ தாழின் துணையால் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது. ஒரே பொருள் இரு வேறு நிலைப்பாடினை உடையோருக்கு இரு வேறு விதமாக அமைகிறது.

நமது வாழ்வும் அத்தகையதே. நமது வாழ்க்கை பயணத்தில், சவால்கள் என்னும் நிறைய கதவுகள் குறுக்கிடுகின்றன. நாம் சரியான திசையில் பயணத்தை மேற்கொண்டால் நாம் செல்லும் வழியில் குறுக்கிடுபவை நமது எதிர்காலத்திற்கான உயரிய பொருளை தன்னுள் பாதுகாத்து வைத்திருக்கும் பெட்டகத்தின் நுழை வாயிலே என்பதை அறியலாம்.அவற்றின் திறவு கோல்களும் நம்மிடமே இருக்கின்றன.

நமது பாதை நமக்கு உரியதானதாக இல்லாத பொது எதிர்படுபவைகளும் நமக்கானவைகள் அல்ல. அவற்றை திறக்கும் திறவுகோல்களும் நம்மிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அத்தகைய தருணங்களில் காலத்தை வீணடித்து பின் நமக்கான சரியான பாதையை அறிந்து செயல்படுகிறோம்.

நமக்குரிய பாதையில் எதிர்ப்படும் சவால்களும் உடன் தீர்ந்து நமக்கு வழி கிடைப்பதில்லை. அவற்றை தடுப்புச்சுவர் எனக்கருதி முட்டி மோதி உடைக்க பார்க்கிறோம். ஆனால் அவையும் கதவுகளே , அன்னியரின் உள் நுழைவை தடுக்கும் பொருட்டு அத்தகைய தோற்றத்தை கொண்டிருக்கிறது என்பதை உணர சில நாள் ஆகிறது .


எந்த ஒரு சவாலிற்கும் தீர்வு வெளியே இருப்பதில்லை. கதவில் அமையப்பெற்ற தாழ்ப்பாளை போல அளவில் சிறியதாக அந்த சவாலின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

அதைக் கண்டு அறிந்து கொள்ளும் வரை மிக பிரமிப்புடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

எப்பொழுது தெளிந்த , ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் அவற்றை அணுகி தாழினை கண்டு கைக்கொள்கிறோமோ , அப்பொழுது இதுநாள் வரை நம்மை அச்சுறுத்திய அப்பெருங்கதவு , நமது ஆணைக்கு கட்டுப்பட்டு மிக சுலபமாக நமது எதிர்கால வசந்தத்திற்கு வழி காட்டுகிறது.

திறவுகோல் உங்களிடம். ஆகவே கதவுகளைக் கண்டு கலங்காமல் தேடுங்கள் தாழ்ப்பாளினை. நமக்கான வாழ்க்கை நமக்காகவே காத்திருக்கிறது.

Saturday, January 9, 2010

எண்ணத்தின் திசையை மாற்றும் இசை

பல தரப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் நாள்தோறும் சந்திக்கிறோம். ஒரு நாளின் அனுபவங்களை அசைபோடும்போது நமக்கு மகிழ்ச்சி ,வருத்தம் ,கோபம் அல்லது அமைதி இவற்றுள் ஏதோ ஒரு உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. அத்தகைய உணர்வுக்கு ஏற்றவாறு நமது மனமும் தனது நிலை கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் எவ்வாறு விழிக்கும் பொழுது புத்துணர்வுடன் விழிக்கின்றோமோ அவ்வாறே உறங்கும்போதும் புத்துணர்வுடனோ அல்லது சலனமில்லா மனதுடனோ உறங்குதல் அவசியம்.

மிதமிஞ்சிய மகிழ்ச்சி கர்வத்தையும், வருத்தம் தன்னிரக்கத்தையும் , கோபம் தீய எண்ணங்களையும் நம் மனத்தில் விதைக்கும் .

இவ்வகை உணர்ச்சிகளை சமன்படுத்தி ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நம் மனம் அமைதியில் மட்டுமே உறைவதற்கு வழி வகை செய்தல் மிக அவசியம். இதுவும் ஒரு வித யோக சாதனை ஆகும்.

இத்தகைய நிலையை அடைய இசை பெரிதும் துணை செய்கின்றது . இசையை ரசிக்க , ஸ்வர ஞானமோ, ராக நுணுக்கங்களை பற்றிய அறிவோ தேவை இல்லை.
ஒவ்வொரு இசையும் , அது கர்னாடகமானாலும் , க்ராமியமானாலும், மேலை நாட்டுடையதானாலும் தனது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒவ்வொரு உணர்வுகளை தூண்ட வல்லது. திரை இசை இவற்றுள் ஏதேனும் ஒன்றின் பரிமாணமாகவே வெளிப்பட்டு அதிர்வுகளை பிரதிபலிக்கிறது.

ஆகையால் இசைபற்றிய ஞானம் இல்லாமலேயே இசையை அனுபவித்தல் சாத்தியம்.

அடிப்படையில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. பலதரப்பட்ட சங்கீதத்தை கேட்கும் நாம் நமது மனதில் தாக்கத்தை எற்படுத்துபவற்றை , எத்தகைய தாக்கம் என்பதையும் சேர்த்து பதிவு செய்துகொண்டால் , நமது தேவையின் பொது அவை அருமருந்தாக பயன்படும்.

நமக்காக நாம் இத்தகைய ஒரு சிறு பயிற்சியை செய்து ஒரு பட்டியலை தயார்செய்துகொண்டால் நம்முடைய மன அமைதியின்மை என்னும் அன்றாட நோய்க்கு நாமே மருத்துவம் பார்க்கலாம்.

பொதுவான சில ராக பரிந்துரைகள் :
இவை எனக்கு பயன் தந்ததால் உரைக்கிறேன்

கர்வம் கொள்ளும் போது : ரேவதி ராகம்
சோர்வு கொள்ளும் போது : கதன குதூகலம் மற்றும் வசந்தா
தன்னிரக்கம் கொள்ளும் போது : கம்பீர நாட்டை

இவை மேற்குறிப்பிட்ட நிலையை சமன் செய்து நமது மனநிலையை அமைதி கொள்ள செய்யும்.

முயன்று பாருங்கள் , பலன் அளித்தால் பிறருக்கு பரிந்துரையுங்கள்.

கீழ் காணும் வலை பக்கத்தில் திரை இசையில் வந்த ராகங்களைப்பற்றி குறிப்பு உள்ளது. அவற்றில் உங்கள் மனதிற்கு பிடித்த பாடல் இருந்தால் , அது எந்த மனோபாவத்திற்கு உங்களை அழைத்து செல்கிறது , என்ன ராகத்தில் உள்ளது எனக்கண்டு உங்கள் மருந்தை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள்.

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்
http://www.tfmpage.com/forum/classical.html#g



Thursday, January 7, 2010

தோழியின் வேண்டுகோளுக்காக தொடர்ச்சி இம்மையும் மறுமையும்

நமது மூதாதையர்கள் பிரசவ வைராக்கியம் மற்றும் மயான வைராக்கியம் எனக் கூறுவார்கள் . மயான வைராக்கியம் என்றால் , ஒருவரின் இறுதி ஊர்வலத்தை கண்ணுறும் பொழுது நாம் இந்த வாழ்வின் நிலையற்ற தன்மையை பற்றி யோசித்து இனி நல்லவைகளை மட்டுமே செய்ய வேண்டும் என உறுதி கொள்வோம். சிறிது நாட்களில் இவ்வுலக சூழலில் நமது இயல்புக்கு மாறிவிடுவோம். இத்தகைய உறுதி மொழிகள் ஒரு தற்காலிக மாற்றமே ஆகும். அவை பயன் தர தொடங்கும் முன் நாம் நமது பழைய நிலைக்கு மாறி விடுவோம்.
ஆகையால் எண்ணி துணிந்து கருமத்தை செய்து அதில் உறுதியாக இருந்தால் இம்மை மட்டுமல்ல மறுமையும் நம் வசமாகும்

Saturday, January 2, 2010

அமைதியான எதிர்ப்பும் ஆதரவே ஆகும்

நமது அன்றாட வாழ்க்கையில் வாத பிரதிவாதங்களை எதிர் கொள்கிறோம். இவை நம்மை சுற்றியுள்ள சூழலில் நமக்கு ஒவ்வாத கருத்துக்களோ அல்லது சம்பவங்களோ நமது கவனத்தை ஈர்க்கும்போது எற்படுகிறது.

நாம் அன்றாடம் பழகுவோரிடத்தில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது நமது உண்மையான கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் துணிவுடன் எதிர்மறையான கருத்தானாலும் முன் வைக்கிறோம்.

நம்மைவிட பெரியோரிடத்தில் மரியாதையின் நிமித்தம் அளவுடன் நமது கருத்து வேறுபாட்டை எடுத்து வைக்கிறோம்.( உதா. அலுவலகத்தில் மற்றும் உறவினர் சமூகத்தில் ).

அறிமுகமில்லாத வலியோரிடத்தில் அமைதி காக்கிறோம். (உதா. அதிகார மற்றும் அரசியல் வர்க்கம் ).இது அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற குறளின் வாக்கிற்கு ஒப்புடையதாகும்

ஆனால் நம்மால் எதிர்க்க முடிந்த எதிர்க்க வேண்டிய தருணங்களில் நாம் நமது சுயநலத்தின் பொருட்டு , நமது பெயரை மட்டும் காத்துக்கொள்ளும் பொருட்டு சாதிக்கும் மௌனம் , நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களுக்கும் அங்கீகாரம் அளிப்பது போல் ஆகும் .

உதா.
௧. நமக்கு நெருக்கமானவர்களால் பொது நண்பர் ஒருவர் மீது சுமத்தப்படும் அவதூறுகளின் போதும்
௨. அறிமுகமில்லா வலியோரால் பிறர் உயிருக்கோ , மானத்திற்கோ தீங்கு ஏற்படும் போதும் .
௩. கல்லூரிகளில் சக தோழர்களால் இளைய மாணாக்கர்களுக்கு தீங்கு நேரும் போதும்.

இத்தகைய சமயங்களில் நம்மை நேரிடையாக தாக்காதவரை நலம் என நமது உயிருக்கும் பெயருக்கும் பாதுகாப்பு வேண்டி அமைதியை கைகொள்கிறோம்.

இத்தகைய மனோபாவம் அந்த கொடுஞ்செயலை செய்பவரின் மனோபாவத்தை விட மிகவும் கொடியது.

எனது கல்லூரி காலங்களில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய சம்பவங்களை எதிர் கொண்டிருக்கிறேன்.

நான் படித்தது புதியதாய் தொடங்கப்பட்ட கல்லூரியில் என்பதால் எங்களுக்கு முன் மாணாக்கர் அணி என எதுவும் இல்லை.
நாங்கள் இரண்டாம் ஆண்டு சென்ற பொழுது புதியதாய் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ஒரு அரணாய் இருந்திருக்கிறேன். வகுப்பு நேரத்தில் பொழுதுபோக்கின் பொருட்டு பொய்யான காரணங்களை கூறி வெளிநடப்பிற்கு அழைப்பு விடுக்கும் சக மாணவர்களின் செயல்களுக்கு , அவர்களின் பலத்திற்கு பயந்து மௌனியாய் ஆசிரியரை அவமதித்து தலை குனிந்து செல்லும் ஒட்டு மொத்த கூட்டத்திலிருந்து வேறுபட்டு தனி ஒருவனாய் எனது சம்மதமின்மையை வெளிப்படுத்தும் விதமாய் வகுப்பில் அமர்ந்திருக்கிறேன் .

எத்தனையோ ஏளனங்கள் , பரிகாசங்கள் என் முதுகிற்கு பின்னால் உதித்தாலும் என் முகத்திற்கு நேராய் வந்தவை ஒன்றுமில்லை.

இன்றும் எந்த சூழலிலும் என் மனசாட்சிக்கு எதிரான செயல்களை சந்திக்கும் போது, செய்பவர் எவ்வளவு வலியோராயினும் எதிர்ப்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

ஆனால் பத்திரிகைகள் , தொலை காட்சிகள் முதலியவை வெளியிடும் அநீதிகள் பற்றிய செய்திகளை கேட்கும்பொழுது வேதனையை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது.

அப்பொழுது நான் நினைவு கொள்ளும் வாசகம் , உலகத்தில் அமைதி ஏற்பட உன் அகத்தில் உள்ளோரை நேசி என அன்னை தெரெசாவும் அண்ணல் காந்தியடிகளும் உரைத்த வைர வரிகளாகும்.

இதன் உட் பொருளாய் நான் கொள்வது உலகில் நீ விரும்பும் மாற்றத்தை ஏற்ப்படுத்த உன் வரையில் முதலில் அதை செயல்படுத்து.

முதலில் நான் நேராக எதிர் கொள்ளும் அநீதிகளை எதிர்ப்பதில் உறுதி வழுவாது இருந்து , பின் எனது எல்லைகளை விரிவுபடுத்துவேன்.

நம்மால் எதிர்க்க முடிந்த தருணத்திலும் நாம் காட்டும் மௌனம் அவ்வநீதிக்கு ஆதரவே தரும் என உறுதியாக நம்புகிறேன்


Friday, January 1, 2010

இம்மையும் மறுமையும்

நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் பிரயாணங்களின் பொழுது எதிர்ப்படும் கோயில்களை வணங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளோம்.
ஆழ்ந்த பக்தியினாலோ அல்லது ஒருமுகப்பட்ட நினைவுடனோ இத்தகைய கடவுள் வணக்கத்தை நாம் செய்வதில்லை. ஒரு தற்செயல் நிகழ்வாகவே இது ஏற்படுகிறது.
நம்முடைய வாழ்க்கை பயணத்திலும் இத்தகைய செயல்களில் நாம் ஈடுபடுகிறோம் . ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையோர் மறுமையை பற்றி நினைக்கும் போதும் பகுத்தறிவாளர்கள் சுய பரிசோதனையின் போதும் தங்களது கடந்த கால செயல்களில் ஏற்பட்ட தவறுகளை பற்றி சிந்திக்கிறோம். அப்பொழுது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் நான் முன் பத்தியில் சொன்ன கடவுள் வணக்கத்தால் ஏற்படும் பலன்களையே தரும். நம்முடைய இந்த உலக சூழல் நம்முடைய பயணத்தில் மட்டுமே நம்மை கவனம் கொள்ள செய்கிறது. அதன் பலா பலன்களை நமக்கு உணர்த்தவோ இல்லை உணர்ந்து கொள்ளவோ நாம் முயற்சிப்பது இல்லை.
சிறுது கடினமானாலும் நமது ஒவ்வொரு செயலையும் எண்ணியோ அல்லது செய்த பின் அதன் தாக்கத்தை ஆராய்ந்தோ பார்த்து தவறுகளை திருத்தி கொண்டோமேயானால் ஆத்திகர்கள் மறுமையை பற்றியும் நாத்திகர்கள் மனிததைபற்றியும் கவலை கொள்ள அவசியம் இருக்காது.
எத்தனையோ சூடான விவாதத்துக்குரிய விஷயங்களை அலசும்போது நம்மை பற்றியும் சில நிமிடம் சிந்திப்போம்

முதல் வணக்கம்

எனது இந்த புது முயற்சிக்கு ஆதரவாக தங்களின் நேரத்தை ஒதுக்கிய அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.