நமது அன்றாட வாழ்க்கையில் வாத பிரதிவாதங்களை எதிர் கொள்கிறோம். இவை நம்மை சுற்றியுள்ள சூழலில் நமக்கு ஒவ்வாத கருத்துக்களோ அல்லது சம்பவங்களோ நமது கவனத்தை ஈர்க்கும்போது எற்படுகிறது.
நாம் அன்றாடம் பழகுவோரிடத்தில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது நமது உண்மையான கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் துணிவுடன் எதிர்மறையான கருத்தானாலும் முன் வைக்கிறோம்.
நம்மைவிட பெரியோரிடத்தில் மரியாதையின் நிமித்தம் அளவுடன் நமது கருத்து வேறுபாட்டை எடுத்து வைக்கிறோம்.( உதா. அலுவலகத்தில் மற்றும் உறவினர் சமூகத்தில் ).
அறிமுகமில்லாத வலியோரிடத்தில் அமைதி காக்கிறோம். (உதா. அதிகார மற்றும் அரசியல் வர்க்கம் ).இது அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற குறளின் வாக்கிற்கு ஒப்புடையதாகும்
ஆனால் நம்மால் எதிர்க்க முடிந்த எதிர்க்க வேண்டிய தருணங்களில் நாம் நமது சுயநலத்தின் பொருட்டு , நமது பெயரை மட்டும் காத்துக்கொள்ளும் பொருட்டு சாதிக்கும் மௌனம் , நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களுக்கும் அங்கீகாரம் அளிப்பது போல் ஆகும் .
உதா.
௧. நமக்கு நெருக்கமானவர்களால் பொது நண்பர் ஒருவர் மீது சுமத்தப்படும் அவதூறுகளின் போதும்
௨. அறிமுகமில்லா வலியோரால் பிறர் உயிருக்கோ , மானத்திற்கோ தீங்கு ஏற்படும் போதும் .
௩. கல்லூரிகளில் சக தோழர்களால் இளைய மாணாக்கர்களுக்கு தீங்கு நேரும் போதும்.
இத்தகைய சமயங்களில் நம்மை நேரிடையாக தாக்காதவரை நலம் என நமது உயிருக்கும் பெயருக்கும் பாதுகாப்பு வேண்டி அமைதியை கைகொள்கிறோம்.
இத்தகைய மனோபாவம் அந்த கொடுஞ்செயலை செய்பவரின் மனோபாவத்தை விட மிகவும் கொடியது.
எனது கல்லூரி காலங்களில் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய சம்பவங்களை எதிர் கொண்டிருக்கிறேன்.
நான் படித்தது புதியதாய் தொடங்கப்பட்ட கல்லூரியில் என்பதால் எங்களுக்கு முன் மாணாக்கர் அணி என எதுவும் இல்லை.
நாங்கள் இரண்டாம் ஆண்டு சென்ற பொழுது புதியதாய் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ஒரு அரணாய் இருந்திருக்கிறேன். வகுப்பு நேரத்தில் பொழுதுபோக்கின் பொருட்டு பொய்யான காரணங்களை கூறி வெளிநடப்பிற்கு அழைப்பு விடுக்கும் சக மாணவர்களின் செயல்களுக்கு , அவர்களின் பலத்திற்கு பயந்து மௌனியாய் ஆசிரியரை அவமதித்து தலை குனிந்து செல்லும் ஒட்டு மொத்த கூட்டத்திலிருந்து வேறுபட்டு தனி ஒருவனாய் எனது சம்மதமின்மையை வெளிப்படுத்தும் விதமாய் வகுப்பில் அமர்ந்திருக்கிறேன் .
எத்தனையோ ஏளனங்கள் , பரிகாசங்கள் என் முதுகிற்கு பின்னால் உதித்தாலும் என் முகத்திற்கு நேராய் வந்தவை ஒன்றுமில்லை.
இன்றும் எந்த சூழலிலும் என் மனசாட்சிக்கு எதிரான செயல்களை சந்திக்கும் போது, செய்பவர் எவ்வளவு வலியோராயினும் எதிர்ப்பதில் உறுதியாய் இருக்கிறேன்.
ஆனால் பத்திரிகைகள் , தொலை காட்சிகள் முதலியவை வெளியிடும் அநீதிகள் பற்றிய செய்திகளை கேட்கும்பொழுது வேதனையை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது.
அப்பொழுது நான் நினைவு கொள்ளும் வாசகம் , உலகத்தில் அமைதி ஏற்பட உன் அகத்தில் உள்ளோரை நேசி என அன்னை தெரெசாவும் அண்ணல் காந்தியடிகளும் உரைத்த வைர வரிகளாகும்.
இதன் உட் பொருளாய் நான் கொள்வது உலகில் நீ விரும்பும் மாற்றத்தை ஏற்ப்படுத்த உன் வரையில் முதலில் அதை செயல்படுத்து.
முதலில் நான் நேராக எதிர் கொள்ளும் அநீதிகளை எதிர்ப்பதில் உறுதி வழுவாது இருந்து , பின் எனது எல்லைகளை விரிவுபடுத்துவேன்.
நம்மால் எதிர்க்க முடிந்த தருணத்திலும் நாம் காட்டும் மௌனம் அவ்வநீதிக்கு ஆதரவே தரும் என உறுதியாக நம்புகிறேன்
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
முடிந்தவரைக்கும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டியது தான். நல்லவிசயம்.
good thoughts keep it up
Post a Comment