நமது உடைமைகள் அனைத்திற்கும் நம்மால் இயன்ற ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைக்கிறோம். சிறிய பூட்டு முதல் பெரிய பெட்டகங்கள்வரைஉள்ளே இருப்பவற்றின் மதிப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறோம். யாராலும் எளிதில் உடைக்க முடியாத கதவுகளையும் சில சந்தர்ப்பங்களில் பயன் படுத்துகிறோம் . ஆயினும் உரிமை உடையோர் கையாளுவதற்கு ஒரு தாழினை பொருத்தி அதற்க்கு ஒரு பூட்டினை பொருத்தி வைக்கிறோம். சம்பந்தப்படாதவருக்கு அந்த கதவு ஒரு சவாலாகவே இருக்கிறது. சம்பந்தப்பட்டவருக்கோ தாழின் துணையால் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது. ஒரே பொருள் இரு வேறு நிலைப்பாடினை உடையோருக்கு இரு வேறு விதமாக அமைகிறது.
நமது வாழ்வும் அத்தகையதே. நமது வாழ்க்கை பயணத்தில், சவால்கள் என்னும் நிறைய கதவுகள் குறுக்கிடுகின்றன. நாம் சரியான திசையில் பயணத்தை மேற்கொண்டால் நாம் செல்லும் வழியில் குறுக்கிடுபவை நமது எதிர்காலத்திற்கான உயரிய பொருளை தன்னுள் பாதுகாத்து வைத்திருக்கும் பெட்டகத்தின் நுழை வாயிலே என்பதை அறியலாம்.அவற்றின் திறவு கோல்களும் நம்மிடமே இருக்கின்றன.
நமது பாதை நமக்கு உரியதானதாக இல்லாத பொது எதிர்படுபவைகளும் நமக்கானவைகள் அல்ல. அவற்றை திறக்கும் திறவுகோல்களும் நம்மிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அத்தகைய தருணங்களில் காலத்தை வீணடித்து பின் நமக்கான சரியான பாதையை அறிந்து செயல்படுகிறோம்.
நமக்குரிய பாதையில் எதிர்ப்படும் சவால்களும் உடன் தீர்ந்து நமக்கு வழி கிடைப்பதில்லை. அவற்றை தடுப்புச்சுவர் எனக்கருதி முட்டி மோதி உடைக்க பார்க்கிறோம். ஆனால் அவையும் கதவுகளே , அன்னியரின் உள் நுழைவை தடுக்கும் பொருட்டு அத்தகைய தோற்றத்தை கொண்டிருக்கிறது என்பதை உணர சில நாள் ஆகிறது .
எந்த ஒரு சவாலிற்கும் தீர்வு வெளியே இருப்பதில்லை. கதவில் அமையப்பெற்ற தாழ்ப்பாளை போல அளவில் சிறியதாக அந்த சவாலின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
அதைக் கண்டு அறிந்து கொள்ளும் வரை மிக பிரமிப்புடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
எப்பொழுது தெளிந்த , ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் அவற்றை அணுகி தாழினை கண்டு கைக்கொள்கிறோமோ , அப்பொழுது இதுநாள் வரை நம்மை அச்சுறுத்திய அப்பெருங்கதவு , நமது ஆணைக்கு கட்டுப்பட்டு மிக சுலபமாக நமது எதிர்கால வசந்தத்திற்கு வழி காட்டுகிறது.
திறவுகோல் உங்களிடம். ஆகவே கதவுகளைக் கண்டு கலங்காமல் தேடுங்கள் தாழ்ப்பாளினை. நமக்கான வாழ்க்கை நமக்காகவே காத்திருக்கிறது.
Thursday, January 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Theda thuvangi vitten Thaazhpaalai
. மௌனமாய் ஒரு பாராட்டு.
Post a Comment