இந்த உலகத்தில் அனைவரும் ( நான் உட்பட)பிறருக்கு தருவதற்கு தயங்காத ஒரு பொருள் அறிவுரை ஆகும். நமது தரம் , எதிர் இருப்பவரின் தரம், சூழ்நிலை இவை எவற்றைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் நாம் வள்ளலாக நம்மை உருவகப்படுத்தி வாரி வழங்குவது அறிவுரைகளைத்தான்.
இதைப்பற்றி யோசிக்கும்போது ஒரு கேள்வி பிறக்கிறது. அது இரு விதமான , முற்றிலும் மாறுபட்ட பதில்களை தனக்காகக்கொண்டு நியாயப்படுத்துகிறது.
அக்கேள்வி
பிறருக்கு அறிவுரை வழங்க நமக்கு தகுதி இருக்கிறதா?
முதல் பதில் : இருக்கிறது
நமது அனுபவங்கள் , நாம் கற்ற பாடங்கள் மூலம் பிறர் பயன்பெற , நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பிறர் வாழ்வில் ஏற்படாமல் இருக்க, அறிவுரை சொல்ல நமக்கு தகுதி இருக்கிறது.
அவை கீழ்காணும் சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கிறது.
௧.நமது வாழ்க்கை பயணத்தில் நம்மீது பலவந்தமாக திணிக்கப்படும் சூழ்நிலைகளால் நாம் பாடம் கற்றுக்கொள்ளும்போது.
உதா: நமது கருத்தை அறியாமல் நமது எதிர்காலக்கல்வி , திருமணம் முதலியவை நமது மூத்தோரால் ஒருதலை பட்சமாக முடிவெடுக்கப்பட்டு அவை நமக்கு மன நிறைவு இல்லாத ஒரு நிலை உருவாக்கி நமது வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும்போது .
௨.நமக்கு நெருக்கமானோரின் மீதுள்ள அதீத நம்பிக்கையினால் ஆராயாமல் ஒரு செயலில் தலைப்பட்டு , நமக்கு தெரிந்தே செய்யும் தவறுகளால் மனக்கசப்பு ஏற்பட்டு பாடம் கற்கும் பொழுது.
உதா : நமது நண்பர்கள் மூலம் வருவதால் மனைகள் , சொத்துக்கள் மற்றும் பங்குச்சந்தை முதலியவற்றில் ஆராயாமல் முதலீடு செய்து பின்பு வில்லங்கங்களினால் அவதியுறும்போது .
௩. நமக்கு தெரிந்தவர்களின் வாழ்வில் கிடைத்த படிப்பினைகளை, அவை நமக்கு ஏற்படாத போதும் பிறருக்கு சொல்லும் போது
உதா : கவனக்குறைவினால் ஏற்படும் திருட்டு, பொருள் இழப்பு , கொள்ளை மற்றும் சுகாதாரத்தில் காட்டும் மெத்தனத்தினால் ஏற்படும் நோய்களை பற்றி கேள்வியுரும்போதும்.
மேற்கண்ட சமயங்களில், நாம் தெரிந்தே செய்த தவறுகளாலும், நம்மீது திணிக்கப்படுபைவகளாலும் நாம் பாடம் கற்று அந்த தவறுகள் மீண்டும் நம் வாழ்வில் நடை பெற அனுமதிக்க கூடாது என்பதில் உறுதி கொள்கிறோம்.
அத்தகைய தருணங்களில் அவற்றை பிறருக்கு கூறி அவர்களின் வாழ்விலும் வருமுன் காத்தலின் பொருட்டு நமக்கு அவர்களின் பால் உள்ள அக்கறையின் காரணமாக நாம் அறிவுரை கூறுவதால் ,நாம் அவற்றை கூறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறோம்.
இரண்டாவது பதில் : இல்லை
௧. நமக்கு கேடு விளைவிப்பவை என நம்மால் உணரப்பட்டும், நம்மால் கைவிட முடியாத பழக்கங்களின் வசம் நாம் இருக்கும் போது.
உதா: கட்டுப்பாடில்லாத உணவு, உறக்கம், சோம்பல், மெத்தனம், ஆழ்ந்து ஆராயாமை, போதை பழக்கங்கள், புறம் பேசுதல் முதலியவை.
இத்தகைய நிலைகளில் சிலர், தத்துவ அறிஞர்களாக மாறி " நான் தான் கெட்டு போயிட்டேன் , நீயாவது இதுல மாட்டிக்காம இரு " என பிறருக்கு அறிவுரை கூறுவர். தாம் ஏதோ மீளாத நிலைக்கு சென்று விட்ட மாதிரியும், இனி திருந்துவதால் ஒரு பயனும் இல்லை, ஆகவே அடுத்தவர்க்கு அறிவுறுத்திக்கொண்டே தமது செயலுக்கு ஒரு நியாயம் கற்பித்துக்கொள்வர்.
இத்தகையோர், பிறர் மீது செலுத்தும் போலியான அக்கறையை விடுத்து , தன் மீதும் , தன்னை சார்ந்திருக்கும் தனது குடும்பத்தின் மீதும் உண்மையான அக்கறையை செலுத்துவோரானால், பழக்கங்கள்
எத்தகைய நிலையில் இருந்தாலும் அவற்றை கைவிடுதல் சாத்தியம்.
தனக்கு நல்லது செய்து கொள்ள வாய்ப்பு இருந்தும் முயலாதவர்கள் , அடுத்தவருக்கு அதே பொருளில் எப்படி நல்லது செய்ய இயலும் ?
அவர்கள் மேற்கண்ட பொருளை சார்ந்து அறிவுரை கூறும் தகுதியை இழந்தவர்கள் ஆகின்றனர்.
ஆகவே,
கீதையின் கண்ணனாக நாம் மாறும் முன், நாம் பிறருக்கு கூற இருக்கும் பொருளில் எத்தகைய நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து, முதல் நிலையில் இருந்தால் மட்டுமே தொடர்வது மிகவும் நன்று.
என்றும் உங்களுடன் அன்பன் முகுந்தன்
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
சிந்திக்க வேண்டிய பதிவு, திரு.ஜெயகாந்தனின் 'சாத்தான் வேதம் ஓதட்டும்' படித்திருக்கிறீர்களோ?
Post a Comment