Wednesday, February 17, 2010

நீங்கள் இன்டிகேட்டரா , ஆக்சிலேட்டரா

நாம் பயன்படுத்தும் வாகனங்களில் இன்டிகேட்டரின் பயன் அனைவரும் அறிந்ததே.
வலப்புறமோ அல்லது இடப்புறமோ திரும்பும்பொழுது அதற்கு பொருத்தமான இண்டிகேட்டரை நாம் உபயோகிப்போம். திரும்பியவுடன் அதை அணைத்து விடுவோம். அணைத்தலும் அவசியம் ஆகும்.
அதே போல் வண்டியை செலுத்தும் வரை ஆக்சிலேட்டரை பயன் படுத்துவோம்.

நம்மை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையில் நாம் ஏதேனும் ஒரு வகையில் பங்கு கொள்கிறோம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினரிடத்தில் நமது அக்கறையை நாம் எடுத்துக்கொள்ளும் உரிமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.

அவர்களிடத்தில் அக்கறை செலுத்தும்போது நாம் எந்நிலையில் உள்ளோம் என்பதை உணருதல் அவசியம்.


நம்மை அவர்கள் எந்த நிலையில் வைத்து பார்க்கிறார்கள் என உணர்ந்து கொள்ளுதலும் முக்கியமாகும்.

நாம் நமக்கு நெருக்கமானவராக கருதும் நண்பர் இடத்தில் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனைகள் அல்லது நமக்கு தெரிந்தவற்றை அவர்களின் நலத்தின் பொருட்டு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம். நமக்கு அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு இருப்பதாக நாமே நம்மை நினைத்துக் கொண்டு பெருமிதம் கொள்வோம்.

இந்நிலையை அவர்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மை ஆக்சிலேடர்ராக நாம் நினைத்துக்கொண்டு தொடர்ந்து பரிவுடன் அவர்கள் முன்னேற்றத்திற்காக யோசித்துக்கொண்டு அதை அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டிருப்போம்.

அவர்களும் அதே நிலையில் நம்மை நினைத்துக்கொண்டிருந்தால் நமது முயற்சிகள் மிகுந்த பயன் உள்ளவையாக அமையும்.

ஆனால்,

அவர்கள் நம்மை ஆக்சிலேட்டர் என்னும் நிலையில் வைக்காமல் எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டுமே நமது கருத்துக்களை அவர்களுக்கு சொன்னால் போதும் என்ற நிலையில் அதாவது இண்டிகேட்டர் நிலையில் நம்மை வைத்திருந்தால்,

ஒரு வண்டி திரும்பிய பின்னும் இண்டிகேட்டர் அணைக்கப்படாமல் இருந்தால் எத்தகைய விபரீதங்கள் ஏற்படுமோ அவை நமக்கும் நம் நண்பருக்கும் இடையிலான நட்பில் ஏற்படும் .

ஒரு வண்டிக்கு இன்டிகேட்டரும் பயன் தரக்கூடியதே! ஆனால் அது குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

அது போல நம்மை தேவையின் போது மட்டுமே ஆலோசனைக்காக எதிர் பார்க்கும் நண்பர்களிடத்தில் நாம் அவர்களுக்கு தேவையல்லாத போதும் ஆலோசனையை கூறிக்கொண்டிருந்தால் நாம் அவர்களுக்கும் நமக்குமே கெடுதல் விளைவிப்பவர் ஆவோம்.

ஆகவே,

பிறரிடத்தில் நமது நிலை என்ன என்பது அறிந்து அதன் பின்னர் நமது அணுகுமுறையை அமைத்துக்கொள்ளுதல் மிக அவசியம்.

அக்சிலேட்டராக இல்லமால் அனைவரும் நம்மை இன்டிகேட்டராக மட்டும் எண்ணினாலும் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

ஏனென்றால்,

நமக்கு பிரியமானவரின் வாழ்க்கை பயணத்தில் குறைந்த பட்சம் திருப்பத்தின் போதாவது நாம் உடன் இருக்கிறோம் அல்லவா?

உங்கள் தொடர்புகளுடன் உள்ள பந்தத்தை பழுது பார்த்து வகைப்படுத்திகொள்ளுங்கள்

ஒவ்வொருவரிடத்திலும் நீங்கள் இன்டிகேட்டரா? அல்லது ஆக்சிலேட்டரா? என்று.

என்றும் உங்களுடன்

அன்பன் முகுந்தன்


இது என் வாழ்வில் நான் கண்டு உணர்ந்த அனுபவம்.