Thursday, July 7, 2011

" ஸ்ரீ சக்ரா" - சில வரிகள்.



சுமார் 52 வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிரார்த்தனை கிளப். வெற்றிகரமாக தனது முதல் வயதை பூர்த்தி செய்து  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது .

நோக்கம்  : நமக்கு தெரிந்தோர், புதியவர் யாராய் இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகாக ஒரு குழுவாக முகம் அறியாதவரானாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது.

செயலாக்கம்  : ஒவ்வொரு ஞாயிறும் காலை 7 . 30 மணி வரை உறுப்பினர்கள் தாம் முன்வைக்க விரும்பும் பிரார்த்தனை கோரிக்கைகளை ,பெயர் மற்றும் கோரிக்கை ஆகியவற்றை type செய்து (eg: viji - marriage, raju - education, raghu - health recovery) எனது mobile எண்ணிற்கு SMS செய்வார்கள். அது தவிர பொது  நலத்திற்காக ( eg: பருவ மழை வேண்டி, இயற்கை சீற்றம் தணிக்க வேண்டி etc)ஒரு வேண்டுதலும் இருக்கும்.அவை அனைத்தும்  காலை 7.40 மணிக்குள் consolidate செய்யப்பட்டு உறுப்பினர் அனைவருக்கும் SMS செய்யப்படும். இதன் மூலம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்து வந்த கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் . காலை 7 . 50 முதல் 8 .00 மணி வரை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது இருப்பிடத்திலேயே, தமக்கு விருப்பமான வழிபாட்டு முறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து SMS ல் வந்துள்ள கோரிக்கைகளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.

இணைவதற்கான தகுதி: உறுப்பினர்கள் எக்காலத்திலும் தமது  குடும்பத்தினருக்காக prayer request செய்ய கூடாது.

தற்போதய உறுப்பினர் எண்ணிக்கை : 15 குடும்பங்கள்

நாளைய பேராசை : உலகம் முழுதும் இதில் உறுப்பினராகி ,தனிப்பட்ட குடும்பம் எதுவும்  இல்லை , பொது நலன் ஒன்றிற்காக மட்டுமே பிரார்த்தனை  என்று  "வாசுதேவ குடும்பகம் " என்ற அனைவரும் ஓர் குடும்பம் என்னும் நிலை வர வேண்டும்.

"Helping hands are better than praying lips" என தெரிந்த போதும் "Something is better than nothing" என்ற முதுமொழியும் நினைவுக்கு வருவதால் சிறிது முனைப்போடு செயல் படுத்தி வருகிறோம். 

என்றும் அன்புடன்
K.T.S.Mugundan
9884087424

Saturday, April 9, 2011

அவ்வளவு பெரிய தலைவரா இந்த அன்னா ஹசாரே ?

திரு. அன்னா ஹசாரே அவர்களால் அவதியுறும் அரசியல்வாதிகளுக்காக இந்த லிங்கினை காணிக்கையாக்குகிறேன்
http://vainadheyan.blogspot.com/2011/04/blog-post.html

Monday, April 4, 2011

அடுத்தவர் சொத்தை அபகரிக்கிரீர்களா ?


இந்த தலைப்பை பார்த்தவுடன் பிறரின் பணம், பொருள், மனை முதலிய செல்வங்கள் நம்  கண் முன்  தோன்றும். ஆனால் நான் குறிப்பிடும் சொத்து சிறிது வித்யாசமானது. 

பெரும்பாலானவர்களின்  தவறான எண்ணம் எதுவென்றால் , நாம் ஒருவருடன் செலவழிக்கும் நேரம் அதிகமாக, அதிகமாக , நமக்கு அவர் மீது இருக்கும் அன்பு வெளிப்படும் என்பதாகும்.

இவை சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடும். 


குடும்பத்தாருடன் மாலை நேரங்களிலும், விடுமுறைகளிலும், 

அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட பணி முடிப்பதற்கான சமயங்களிலும் , 

நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் இருக்கும்போதும், 

நாம் செலவழிக்கும் நேரம் அதிகமாக , அதிகமாக 
குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடத்தில் ஒட்டுதலும், 
அலுவகலத்தில் பணியின் மீது ஈடுபாடும் ஏற்படும்.


கீழ்காணும் கேள்விகளுக்கு "ஆமாம்" அல்லது "இல்லை" இவற்றில் தாங்கள் எந்த அணி என பாருங்கள் ?

1  சிறிது அறிமுகமான நண்பரை ஒரு வேலையின் காரணமாக பார்க்க செல்லும் பொழுது , போன வேலை முடிந்தவுடன் திரும்பி விடுவீர்களா?

2 நண்பன் வேலை செய்யும் வெளியூருக்கு சென்று அவனை அலுவலகத்தில் சந்திக்கும் போது நலம் விசாரித்துவிட்டு உடன் திரும்பி விடுவீர்களா?


3  ஏதாவது சுப நிகழ்ச்சிக்கு சென்றவுடன் அவ்வீட்டாரை கண்டு தங்களின் வருகையை பதிவு செய்து நலன் விசாரிப்புகளுக்கு பின்  அவரிடம் மேலும் பேசாமல் மற்ற நண்பர்களுடன் பேசுவீர்களா?

4 முன்னேற்பாட்டின்படி  ஒரு நண்பருடன் சேர்ந்து வெளியே செல்வதற்கு,அவர் வரும்முன் தயாராவீர்களா?


மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு "இல்லை" என உங்களுக்கு தோன்றினால் மேலும் தொடரவும்.  

ஒவ்வொரு " இல்லை " என்ற பதிலும் தலைப்பில் கண்ட  கேள்விக்கு "ஆமாம் " என்ற பதிலை தரும். 

ஆம். நீங்கள் அடுத்தவர்களின் விலை மதிக்க முடியாத நேரம் என்னும் மிகப்பெரிய சொத்தை தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அபகரிக்கிறீர்கள்

 மேலும் மேலே குறிப்பிட சூழ்நிலைகளில் , நமக்கு தெரிந்தவரானாலும் , நெருங்கியவரானாலும்,   அவர்களை  நிறுத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள் .

இவை அனைத்தும் சிறிய திருட்டென்று வைத்துக்கொண்டால், கீழ் காணும் வகையை என்னவென்று சொல்வது?

நம்மில் பலர், தமக்கு  பொது மேடைகளில் வாய்ப்பு என்றும் கிடைக்காது என்ற விரக்தியில், செல்லும் இடமெல்லாம், நண்பர் வீடானாலும் சரி, உறவினர் வீடானாலும் சரி, நண்பர்க்கு நண்பர் வீடானாலும் சரி , அந்த இடத்தை பொதுக்கூட்டமாக பாவித்து தமக்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் அடுத்தவருக்கு புரிய வைக்க முயற்சிப்பார்கள். 

 இத்தகைய வகையினரை, ஒட்டுமொத்தமாக அனைவரின் நேரத்தையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர் எனக் கொள்ளலாம். 


நமக்கே தெரியாமல், நாம் செய்யும் இந்த களவினை கண்டறிந்து , முதலில் நம்மை திருத்திகொண்டால், 

அடுத்தவர் சொத்தை அபகரிக்காதவர்  ஆவோம். 

என்றும் அன்புடன்
கே.டி.எஸ். முகுந்தன் 
9884087424











Tuesday, March 15, 2011

பயனற்றவைகளின் பயன்

நகரத்தில் பிறந்து , படித்து, வளர்ந்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு இளைஞன் சொந்த வேலை காரணமாக முதல் முறையாக ஒரு அக்மார்க் தமிழ் கிராமத்திற்கு சென்றான்.  

சினிமாவிலும், கதைகளிலும் மட்டுமே கிராமத்தை பற்றி கண்டும், கேட்டும் இருந்தான்.  கிராமத்தை பற்றிய பொதுவான ஒரு எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது.

அவன்  பார்த்தவை எவையும் அவனுக்கு புதிதாக இல்லை. நகரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சமையல், துணி துவைத்தல், நீர் இறைத்தல் முதலியவை மிகவும் கடினமாக செய்ய வேண்டி இருப்பதை கண்டு நகரத்தின் பால் பெருமிதம் கொண்டான். 

 கிராமத்து மக்கள் எதையும் ஆழ்ந்தோ,தொலைநோக்குடனோ செய்வதில்லை என்ற எண்ணம் அவனுள் மேலோங்கி இருந்தது. மேலும் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களால் நன்மை ஆன போதும் அவர்கள் காரணம் அறியாமல் முன்னோர் வாக்கின்படி அவற்றை செய்வது அவனை ஏளனமாக சிரிக்க வைத்தது.

நகரின் வாசனை இல்லாமல் அவர்கள் வாழ்வதை பார்த்து அவன் பரிதாபப்பட்டான். 

ஒரு நாள் வாக்கிங் செல்வதற்காக ஊர் எல்லை வரை சென்றான். மிகவும் நடந்ததால் களைப்படைந்து உட்கார ஏதாவது இடம் இருக்குமா என பார்த்தான் .

அருகில் ஒரு மரமும் , அதை ஒட்டி இரு கற்கள் நடப்பட்டு அவை இரண்டிற்கும் மேல் சம தளமாய் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.  அதில் சென்று அமரலாம் என அருகில் சென்று பார்த்தான்.  மேலே உள்ள கல் அவன் மார்பின் உயரத்திற்கு இருந்தது.

வழக்கம் போல் கிராமத்தவர்கள் முன் யோசனை இல்லாதவர்கள் , ஒரு கல் இருக்கையை கூட ஒழுங்கான உயரம் பார்த்து வைக்க தெரியாதவர்கள் என கேலியாக எண்ணிகொண்டான்.

அப்பொழுது ஒரு பெண் தலை நிறைந்த சுமையுடன் அவ்வழியே வந்தாள் அந்த கல்லினை நெருங்கியவள் , தலை சுமையை மிக எளிதாக அந்த கல்லின் மீது வைத்தாள்.

அந்தப்பெண்மணியின் அந்த செய்கை அந்த இளைஞனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.  தான் பயனற்றது என நினைத்தது உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகம் பயன் உள்ளது என்ற உண்மையும், மெத்த படித்த தன்னால் உணரமுடியவில்லையே என வெட்கப்பட்டான்.

நமது மூதாதையர்கள் ஆழ்ந்த அறிவுடனும் , தன்னலமில்லாமலும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செய்திருக்கின்றனர் என்பது அவனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது. 

அக்கல்லினை சுமைதாங்கி என அழைப்பார்கள். இறந்தவர்களின் நினைவாக அவர்களின் உறவினர்கள் வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டி அமைப்பார்கள்.

நாமும் நமது வாழ்கையில் , நமது அறிவினை மட்டுமே மேலானது , மறுக்க இயலாதது என்ற எண்ணத்துடன் அடுத்தவர் வாழ்க்கையில் ஆலோசனை வழங்குகிறோம்.  


தலை சுமை இல்லாதவர்க்கு  சுமைதாங்கியின் உபயோகம் அறியமாட்டார்கள் . சுமை உள்ளவர்கள் மட்டுமே அதன் சுகம் அறிவர். 

நாமும் நமது வாழ்கையில் நமக்கு தெரியாதவற்றை பயனற்றது என ஒதுக்குகின்றோம். நமக்கு பரிச்சயமில்லை என்பதால் மட்டும் எதுவும் உபயோகமற்றதாகாது.

ஆகையால் நாமும் பிறரின் சொந்த விஷயங்களில் ஆலோசனை என்ற பெயரில் குறிக்கிடும் போது  நமக்கு  ஏற்புடையதை ஒட்டி ஆலோசனை வழங்காமல் , ஒரு வழிமுறை நமக்கு புதிதானதாக இருந்தாலும் பயனுள்ளதா என ஆராய்ந்து அவ்வழிமுறை அவர்களுக்கு பயன் தரும் எனில் பழகுதல் நலம்.

பிறருக்கு உதவ நினைப்பதே மனிதத்தன்மையின் அடிப்படை. அந்த உதவியையும் அவர்களின் சுமை அறிந்து அதற்கான சுமைதாங்கி எது என்பதை நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கு உணர்தினோமேயானால் , உறவும் வலுப்படும் நம் எண்ணமும் முழுப்பெரும்.


அன்புடன்
கே.டி. எஸ். முகுந்தன்
9884087424  





























 

Sunday, January 9, 2011

புரிதலினால் வரும் பிரிவு

நம்மை தவிர்த்து மற்ற யாவரையும் ஒரு உறவின் மூலம் அடையாளம் கொள்கிறோம். . அவை ரத்த சம்பந்தமான சொந்தங்கள், தூரத்து சொந்தங்கள் , நண்பர்கள், தெரிந்தவர்கள், அலுவலக சக பணியாளர்கள்  என பல வகை படுகிறது. அவர்களுடன் பழகும் நேரங்களும் உறவிற்கு தகுந்தவாறு வேறுபடுகிறது. 

மரணம் என்ற பொதுவான ஒன்று நமது உறவுகளை காரணம் ஏதுமின்றி நம்மிடத்திலிருந்து பிரிக்கிறது.  இத்தகைய பிரிவில் யார் மீதும் குற்றம் காண இயலாது. ஏனெனில் இந்த பிரிவு நம் மீது திணிக்கப்படுகிறது. 

சில நேரங்களில்  நமது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரை கல்வி, வேலை , திருமணம் முதலிய காரணங்களால்  பிரிய நேரிடுகிறது. இத்தகைய பிரிவும் வருத்தத்தை தரும் என்றாலும் , அவை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு  என நாம் ஆறுதல் அடைய முடியும்.


சில பிரிவுகள் வாக்கு வாதத்தினாலோ அல்லது சரியான புரிந்துணர்வு இல்லாததினாலோ ஏற்படும்.  இத்தகைய சம்பவங்கள் ஒரு சாரார் மற்றொரு சாராரை குற்றம் சாட்டுவதில் தொடங்கி, மனக்கசப்பு, நிரந்தர பிரிவு என பல வடிவம் எடுக்கும்.

நான் தற்போது குறிப்பிட விரும்புவது வேறொரு வகையான பிரிவாகும். இது வருத்தத்தை கொடுத்தாலும் ,வருங்காலத்தில் உறவின் தன்மைக்கு ஏதும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும்.

சில தருணங்களில், நமக்கு நெருக்கமானோரிடத்தில் வருத்தமோ அல்லது மனக்கசப்போ ஏற்படும்.  இவற்றிற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரியவந்தால் அவற்றை அலசி ஆராய்ந்து சரி செய்தல் சாத்தியம்.

காரணம் வெளிப்படையாக தெரியாத போதும்  சம்பந்தப்பட்டவர் நமது நெருக்கமான , உரிமையான நண்பராய் இருப்பின் மனம் விட்டு பேசி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது.


ஆனால் நமது மரியாதைக்குரியவரிடத்தில் ஏற்படும் சிறு சிறு விரிசல்கள், காரணம் அறியப்படாத போது நம்மை ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு அழைத்து செல்கிறது.  அவர் மீதுள்ள மரியாதை காரணமாக , உரிமையுடன் மனம் விட்டு பேசுதல் சாத்தியமில்லாதாகிறது. 

ஆயினும் நம்முடைய ஒரு செயல் அவரை வருத்தம் கொள்ள செய்வதுடன் நம்மிடத்திலிருந்து அவரை விலக்கி வைக்கிறது என்னும் உண்மையை நம் மனம் அறிந்தாலும் அச்செயல் எது என தெரியாததால் நாமும் பயனற்ற ஒரு நிலையில் இருக்கிறோம். 

நமது மரியாதைகுரியவருக்கு நம்மால் ஏற்படும் இந்த அசௌகரியத்தை புரிந்து கொண்டு, காரணத்தை நாமே கண்டுபிடித்து சரி செய்து கொண்டால் , பழைய உறவு மீண்டும் பூக்கும்.

ஆனால்,

காரணம் என்பது நம்மால் அறியப்படமுடியாத போது நாம் செய்ய வல்ல ஒரு மகத்தான உதவி என்ன வென்றால் அவர்தம் வருத்தம் தவிர்க்க பிரிந்து இருப்பதே ஆகும்.

இந்த பிரிவும் வருத்தம் தரக்கூடியது தான் என்றாலும், தவிர்க்கமுடியாததாகும். அதுவல்லாமல் மேம்போக்காக ஒன்று சேர்ந்து இருந்தால் வருத்தத்தின் எல்லை விரிவடையும், மேலும் மனக்கசப்பு வளரும், உறவின் நிலைமை சீர் கெடும்.

இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கும் வண்ணம், அவரின் எண்ணஓட்டத்தில் இருந்து முழுமையாக நம்மை ஒதுக்காமல் இருக்க, தற்போதுள்ள காரணம் அறியப்படாத
குறைகளுடன் நாம் கொள்ளும் ஒரு சிறு பிரிவானது , காலம் என்னும் மாமருந்தினால் மறைந்து மீண்டும் அதே பழைய அன்புடன் சில நாள் பிறகு ஏற்படும் என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கும்.

இத்தகைய பிரிவு வருத்தம் அளித்தாலும் ஒருவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதை மற்றும் அவரின் உணர்வுகளின் பால் நாம் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடே ஆகும்.

ஆகவே இவ்வகை பிரிவுகளை , புரிதலினால் வரும் பிரிவு என்கிறேன்.

என்றும் உங்களுடன்

அன்பன் முகுந்தன்
9884087424