நம்மை தவிர்த்து மற்ற யாவரையும் ஒரு உறவின் மூலம் அடையாளம் கொள்கிறோம். . அவை ரத்த சம்பந்தமான சொந்தங்கள், தூரத்து சொந்தங்கள் , நண்பர்கள், தெரிந்தவர்கள், அலுவலக சக பணியாளர்கள் என பல வகை படுகிறது. அவர்களுடன் பழகும் நேரங்களும் உறவிற்கு தகுந்தவாறு வேறுபடுகிறது.
மரணம் என்ற பொதுவான ஒன்று நமது உறவுகளை காரணம் ஏதுமின்றி நம்மிடத்திலிருந்து பிரிக்கிறது. இத்தகைய பிரிவில் யார் மீதும் குற்றம் காண இயலாது. ஏனெனில் இந்த பிரிவு நம் மீது திணிக்கப்படுகிறது.
சில நேரங்களில் நமது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரை கல்வி, வேலை , திருமணம் முதலிய காரணங்களால் பிரிய நேரிடுகிறது. இத்தகைய பிரிவும் வருத்தத்தை தரும் என்றாலும் , அவை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என நாம் ஆறுதல் அடைய முடியும்.
சில பிரிவுகள் வாக்கு வாதத்தினாலோ அல்லது சரியான புரிந்துணர்வு இல்லாததினாலோ ஏற்படும். இத்தகைய சம்பவங்கள் ஒரு சாரார் மற்றொரு சாராரை குற்றம் சாட்டுவதில் தொடங்கி, மனக்கசப்பு, நிரந்தர பிரிவு என பல வடிவம் எடுக்கும்.
நான் தற்போது குறிப்பிட விரும்புவது வேறொரு வகையான பிரிவாகும். இது வருத்தத்தை கொடுத்தாலும் ,வருங்காலத்தில் உறவின் தன்மைக்கு ஏதும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும்.
சில தருணங்களில், நமக்கு நெருக்கமானோரிடத்தில் வருத்தமோ அல்லது மனக்கசப்போ ஏற்படும். இவற்றிற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரியவந்தால் அவற்றை அலசி ஆராய்ந்து சரி செய்தல் சாத்தியம்.
காரணம் வெளிப்படையாக தெரியாத போதும் சம்பந்தப்பட்டவர் நமது நெருக்கமான , உரிமையான நண்பராய் இருப்பின் மனம் விட்டு பேசி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது.
ஆனால் நமது மரியாதைக்குரியவரிடத்தில் ஏற்படும் சிறு சிறு விரிசல்கள், காரணம் அறியப்படாத போது நம்மை ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு அழைத்து செல்கிறது. அவர் மீதுள்ள மரியாதை காரணமாக , உரிமையுடன் மனம் விட்டு பேசுதல் சாத்தியமில்லாதாகிறது.
ஆயினும் நம்முடைய ஒரு செயல் அவரை வருத்தம் கொள்ள செய்வதுடன் நம்மிடத்திலிருந்து அவரை விலக்கி வைக்கிறது என்னும் உண்மையை நம் மனம் அறிந்தாலும் அச்செயல் எது என தெரியாததால் நாமும் பயனற்ற ஒரு நிலையில் இருக்கிறோம்.
நமது மரியாதைகுரியவருக்கு நம்மால் ஏற்படும் இந்த அசௌகரியத்தை புரிந்து கொண்டு, காரணத்தை நாமே கண்டுபிடித்து சரி செய்து கொண்டால் , பழைய உறவு மீண்டும் பூக்கும்.
ஆனால்,
காரணம் என்பது நம்மால் அறியப்படமுடியாத போது நாம் செய்ய வல்ல ஒரு மகத்தான உதவி என்ன வென்றால் அவர்தம் வருத்தம் தவிர்க்க பிரிந்து இருப்பதே ஆகும்.
இந்த பிரிவும் வருத்தம் தரக்கூடியது தான் என்றாலும், தவிர்க்கமுடியாததாகும். அதுவல்லாமல் மேம்போக்காக ஒன்று சேர்ந்து இருந்தால் வருத்தத்தின் எல்லை விரிவடையும், மேலும் மனக்கசப்பு வளரும், உறவின் நிலைமை சீர் கெடும்.
இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கும் வண்ணம், அவரின் எண்ணஓட்டத்தில் இருந்து முழுமையாக நம்மை ஒதுக்காமல் இருக்க, தற்போதுள்ள காரணம் அறியப்படாத
குறைகளுடன் நாம் கொள்ளும் ஒரு சிறு பிரிவானது , காலம் என்னும் மாமருந்தினால் மறைந்து மீண்டும் அதே பழைய அன்புடன் சில நாள் பிறகு ஏற்படும் என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கும்.
இத்தகைய பிரிவு வருத்தம் அளித்தாலும் ஒருவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதை மற்றும் அவரின் உணர்வுகளின் பால் நாம் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடே ஆகும்.
ஆகவே இவ்வகை பிரிவுகளை , புரிதலினால் வரும் பிரிவு என்கிறேன்.
என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்
9884087424
Sunday, January 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment