Saturday, April 5, 2014

நாம் யார் கனவோ ?


ஒரு முறை நாரத மகரிஷிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவர் பகவானிடம் , " அனைவரும் மாயை , மாயை என கூறுகிறார்களே , அப்ப்டியென்றால்  என்ன ?" என்று கேட்டார் .

உடனே பகவானும், ஒரு குளத்தை காண்பித்து "அதில் ஒரு முறை மூழ்கி எழுந்து வா" என்று கூறினார் .

நாரதரும் உடனே அந்த குளத்தில் மூழ்கினார்.

அதன் பிறகு நடந்தவை.:

நாரதர் பூவுலகில் ஒரு ஆண்  குழந்தையாக பிறந்து , வளர்ந்து, மணம்  செய்து, எண்ணிலடங்கா  குழந்தைகள் பெற்று , துன்புற்று , இறுதியில் வாழ்க்கையை முடித்துக்கொள்ள , ஒரு குளத்தில் குதித்தார்.

மீண்டும் எழுந்த போது, திருமாலின் அருகில் இருப்பதை கண்டார்.

பகவான் சிரிப்புடன் இது வரையில் நீ பூவுலகில் வாழ்ந்ததாக நினைத்துகொண்டிருந்தது தான் "மாயை" எனக் கூறினார்.

இந்த உலக வாழ்க்கையில் சிறிது மட்டுமே மகிழ்ச்சி உள்ளது , பெரும்பாலும் துன்பமே என எந்நாளும் வருந்துவோருக்கு இந்த கதை சிந்தனைக்கு ஒரு கருவாக அமைகிறது அல்லவா ? 

இங்கு நாம் சந்திக்கும் அத்தனை சம்பவங்களும் illusion ஆகும். இவை நிரந்தரமானவையோ, நம்மை துன்பப்பட வைக்க கூடிய நோக்கத்திலோ வருபவை அல்ல. 

அனைத்திலும் பங்கு பெற்று , ஒரு நாடகத்தின் பகுதியே இவை என சிந்தித்து அனைத்தையும் சரி சமமாக பாவித்தல் வேண்டும்.

ஆகவே நாமும் நமது வாழ்கையும் யாருடைய கனவோ ஆகும் .

நாம் யாருடைய கனவாக இருக்கிறோம் என கண்டறிதல் ,
மிக பெரிய மகான்கள் தேட சொன்ன " நான் யார் ?" என்ற வினாவிற்கு  எனக்கு தெரிந்த விளக்கம் ஆகும் .

வணக்கங்களுடன் 
K.T.S.Mugundan


சிறிது விசாலமாக பார்ப்போம்



திருமாலும் நாரதரும் ஒரு முறை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தபோது , நாரதர் பகவானிடம் "திருமாலிடம் மிகுந்த பக்தி கொண்டுள்ளவர் யார்?" எனக் கேட்டார்.திருமாலும் ஒரு குடியானவனை சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடன் நாரதர் அம்மனிதனின் அன்றாட செய்கைகளை கவனித்தார்.

அவன் காலை எழுந்தவுடன் ஒரு முறையும், உணவு உண்ணும்போது ஒரு முறையும் , இரவு தூங்கும் பொழுது ஒரு முறையும் " ஹரி ஹரி " என்று நாரணன் நாமத்தை கூறி வந்தான்.

இதைக்கண்ட நாரதர் புன் சிரிப்புடன் " எப்பொழுதும் தங்கள் நாமத்தை சொல்லும் என்னை விட , மிக மிக குறைந்த முறை சொல்லும் இவன் மிக சிறந்த பக்தனா?" என ஆணவத்துடன் கேட்டார் . உடனே பகவான் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை நாரதரிடம் கொடுத்து மூவுலகையும் ஒரு முறை எண்ணை  சிறிதளவும் சிந்தாமல் சுற்றி வர வேண்டும். அப்படி வந்தால் உண்மையான பக்தன் யார் என தெரியும் என கூறினார்.

நாரதரும் மிகுந்த கவனத்துடன் மூவுலகையும் சுற்றி வந்தார். வந்தவுடன் பகவானிடம் "தாங்கள் சொன்ன படி ஒரு சொட்டும் விழாமல் சுற்றி வந்து  விட்டேன் . இப்பொழுது சொல்லுங்கள் யார் மிக சிறந்த பக்தர்?" என கேட்டார்.

பெருமாளும் சிரிப்புடன் , "மூவுலகை சுற்றி வந்த போது  எத்தனை முறை என் நாமத்தைக் கூறினாய் ? "என கேட்டார். அப்போதுதான் வேலை கவனத்தில் தான் ஒரு முறை கூட சொல்லவில்லை என நாரதருக்கு உரைத்தது .

பகவான் சிரிப்புடன் , "நீ வேலை இல்லாத போது 1000 முறை கூறியதையும் , வேலையின் பொது என்னை மறந்ததையும்,அந்த குடியானவன் தனது வறுமை மற்றும் வேலை  பளுவிலும் என்னை மறவாமல் எனது பெயரை கூறுவதையும் வைத்து பார்க்கும் போது எது சிறந்த பக்தி என நீயே முடிவு செய்து கொள் "எனக்கூறினார்.

நம்மில் பெரும்பாலோர் ஒரு கூட்டு முயற்சியில் , நாம் தான் மிக அதிக பங்களிப்பு கொடுக்கிறோம் என நமக்கு நாமே ஒரு சபாஷ் போட்டுக்கொள்கிறோம்.

நம்மால் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களது பங்களிப்பையும் சிறிது கவனத்தில் கொண்டோமேயானால் , நமது உண்மையான நிலை என்பது தெரிய வரும்.

இது ஒரு சிறு Self Analysis தான் முயற்சித்து பாருங்களேன்.

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan