Wednesday, August 22, 2018

விழும் போதும், எழும் போதும் குழந்தையாவோம்.

பெரும்பான்மையான தருணங்களில் நாம் நமது, சொல் , செயல் அனைத்தையும் பிறரை சார்ந்தே செய்கிறோம். ஒரு சபையில் நமது பங்களிப்பு அனைவராலும் கவனிக்கப்படும்போது இத்தகைய நிலைப்பாடு அவசியம். ஆனால், நாம் தனிமையில் இருக்கும்போதும், நமக்கான முடிவுகளை எடுக்கும்போதும் நம்மை விட , பிறரை பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.


ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன், நமது பங்களிப்பு அதில் சிறிதான போதும், நம் எண்ணம் எல்லாம்... அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரும் நமக்கு பின்னால்  நம்மை பற்றி புறம்  பேசுவார்கள் என்ற ஐயத்துடனே  இருக்கின்றோம்.

சிறிய விஷயமானாலும், நம் உடையை பற்றி என்ன பேசுவார்கள்? நாம் எடுத்த மதிப்பெண்களை பற்றி என்ன comment அடிப்பார்கள்? நமது performance  பற்றி எவ்வாறு தங்களுக்குள் விமர்சித்து கொள்வார்கள் என அந்த நினைவாகவே குழம்பி தவிக்கின்றோம்.

உண்மையில், நம்மை போன்ற சராசரி மனிதர்களின் செய்கைகளை பற்றியோ, சாதனைகளை பற்றியோ, உன்னிப்பாக, அக்கறையாகவோ, அல்லது விமர்சனத்திற்காகவோ தொடர்பவர் யாருமில்லை. 

வாழ்க்கை ஓட்டத்தில், தமது அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்கே  ஒருவருக்கும் நேரம் போதவில்லை. இதில் நம்மை போன்ற சாதாரணமானவர்களின் நிலயை எண்ணி பெருமை படுவதற்கோ,அல்லது பரிகாசம் பண்ணுவதற்கோ யாருக்கும் நேரமில்லை.

நமது செய்கைகள், முயற்சிகள் ,சாதனைகள், சறுக்கல்கள்,தோல்விகள்,அனைத்தும், நம்முள் உருவாகி, நம்முள் வளர்ந்து, நம்முடனேயே கரைந்து விடுகின்றன.

இவற்றை ஏறெடுத்து பார்ப்பதற்கு யாருக்கும் நேரமில்லை, தேவையுமில்லை. 

எவ்வாறு ஒரு சிறு குழந்தையானது, கீழே விழும்போது, யாரும் கவனிக்க வில்லையெனில் , தானே எழுந்து சாதாரணமாக செல்கிறதோ, அது போல் நாமும் நமது வெற்றியின் போதும், தோல்வியின் போதும், இவை யாராலும் கவனிக்கப்பட வில்லை என்ற எண்ணத்துடன் நமது பயணத்தை தொடர்ந்தோமேயானால், 

வெற்றியில் தலைக்கனமும் , தோல்வியில் தன்னிரக்கமும் என்றும் தலை தூக்காது.

 நாமாக  வாழ்வோம், நமக்காக வாழ்வோம்.